விருப்பங்களை நிறைவேற்றும் விருத்தாசலேஸ்வரர்

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர், விருத்தபுரீஸ்வரர், விருத்தகிரீஸ்வரர் என்ற திருநாமங்கள் உள்ளன.

Update: 2018-09-04 07:36 GMT
வெங்கனூர் பகுதியை குறுநில மன்னனான லிங்க ரெட்டியார் ஆட்சி செய்து வந்தார். இவரது மகன் அண்ணாமலையார். இருவருமே சிறந்த சிவ பக்தர்கள். தந்தையும், மகனுமாக விருத்தாசலத்தில் கோவில் கொண்டிருக்கும் பழமலைநாதரிடமும், பெரியநாயகி அம்மையாரிடமும் மிகுந்த பக்தி கொண்டவர்களாக இருந்தனர். லிங்க ரெட்டியார் தனது மகனுடன் ஒவ்வொரு பிரதோஷ காலங்களிலும் விரதம் இருந்து, பழமலைநாதரின் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவார். வழிபாட்டை முடித்த பிறகே இருவரும் அன்றைய தினம் உணவு அருந்துவார்கள்.

ஒரு முறை பிரதோஷ வழிபாட்டிற்காக குதிரையேறி தந்தையும், மகனும் பழமலைநாதர் ஆலயத்திற்குச் சென்றனர். வழியில் வழக்கமாக குறுக்கிடும் வெள்ளாற்றில், அன்று வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. காட்டாற்று வெள்ளம். அந்த வெள்ளத்தில் மறுகரையைக் கடப்பது என்பது இயலாத காரியம். குதிரைகள் வெள்ளத்தைக் கண்டு அஞ்சி முன்னே செல்ல முரண்டு பிடித்தன. இதனால் இறைவனை வழிபடுவதில் தடை ஏற்பட்டு விடுமோ என்று லிங்க ரெட்டியார் வருந்தினார்.

பின்னர் ‘நான் சிவபெருமானுக்கு உண்மை தொண்டராயின், இந்த நதி எங்களுக்கு வழி விடட்டும். இல்லாவிட்டால் இதில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்வேன். எம்பெருமானே! உங்களை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டால், இந்த உயிர் இருந்து எந்த உபயோகமும் இல்லை. இதோ என் உயிர் நீத்து உன் பாதம் வந்தடைகிறேன்’ என்றபடி குதிரையோடு ஆற்றில் இறங்க எத்தனித்தார்.

என்ன ஆச்சரியம்.. நதி இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. லிங்கரெட்டியாரும், அவரது மகன் அண்ணாமலையாரும் மறுகரைக்குச் சென்று, பழமை நாதரை வழிபட்டனர். பின்னர் பெரும் மழை காரணமாக இரவு ஆலயத்திலேயே தங்கினார்கள்.

அன்றிரவு லிங்கரெட்டியார் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘இனி மேல் நீங்கள் என்னை தரிசிப்பதற்காக இங்கே வந்து செல்ல வேண்டியதில்லை. நீங்கள் வரும் வழியில் உங்கள் ஆளுமைக்கு உட்பட்ட திருவெங்கை (இன்றைய வெங்கனூர்) நகரிலேயே நான் திருவுருவம் கொண்டு வீற்றிருக்கிறேன். அதை அறிந்து அங்கு ஆலயம் அமைத்து வழிபடுங்கள். அப்படி ஆலயம் அமைக்கும் போது வட நாட்டில் இருந்து சில சிற்பிகள் வருவார்கள். அவர்களால் உங்களின் திருப்பணி பூர்த்தியாகும்’ என்று சொல்லி மறைந்தார்.

இறைவனின் கட்டளைப்படி, குறிப்பிட்ட இடத்தில் தேட, அங்கே இரண்டு லிங்கத் திருமேனிகளும், அம்பிகை முதலான சிலை வடிவ மூர்த்தகங்களும் இருப்பதைக் கண்டு லிங்க ரெட்டியார் ஆனந்தக் கடலில் மூழ்கினார். பின்னர் அவரது தலைமையில் ஒரு திருப்பணிக் குழு அமைந்தது. கோவில் அமைக்கும் பணி கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வட தேசத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக சிற்பிகள் சிலர் தென்னாட்டை நோக்கி புறப்பட்டு வந்தனர். அவர்கள் திருவெங்கை வழியாக செல்லும் போது, அதை அறிந்த லிங்க ரெட்டியார், அந்த சிற்பிகளைக் கொண்டு ஆலய திருப்பணிகளை முடிக்க நினைத்தார்.

மன்னனின் வேண்டுகோளுக்கு சிற்பிகளும் தலைசாய்த்தனர். காலங்கள் ஓடின. லிங்கரெட்டியார் சிவபதம் அடைந்து விட்டார். தந்தை விட்டுச் சென்ற பணியை, அண்ணாமலையார் எடுத்து செய்தார். சிற்பிகளுக்கு தங்க இடம், உணவு அனைத்தும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். சிற்பிகளின் தலைவனுக்கு சிற்பிகள் அனைவரும் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி ஆலயத்தை முடித்துக் கொடுத்தனர். அவர்களுக்கு மன்னர் தக்க பரிசுகளை வழங்கினார் என்பது கோவில் வரலாறு.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர், விருத்தபுரீஸ்வரர், விருத்தகிரீஸ்வரர் என்ற திருநாமங்கள் உள்ளன. அதுபோல் இறைவிக்கு பெரியநாயகி, விருத்தாம்பிகை, பாலாம்பிகை, இளமைநாயகி, விருத்தகிரீஸ்வரி ஆகிய பெயர்கள் உண்டானது.

ஆலய அமைப்பு

கர்ப்ப கிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் திருச்சுற்று மாளிகை வெளிப்பிரகாரம் என ஆலயம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நிலை கோபுர வாசல் உள்ளது. கர்ப்ப கிரகம் ஓம் என்ற பிரணவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள தேவ கோட்டச் சிற்பங்களில் லிங்கோத்பவர், கருடாழ்வார் மற்றும் வைணவச் சிற்பங்களாக கண்ணன், நரசிங்க பெருமாள், கண்ணன் வெண்ணெய் திருடுதல் போன்ற திருமேனிகள் அமையப்பெற்றுள்ளன.

மூலவர் சன்னிதியையும், அம்மன் சன்னிதியையும் சுற்றி அழகிய நிலையில் திருச்சுற்று மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இங்கே காணப்படும் சிற்பங்களான புலியுடன் வீரன் போரிடுதல், கிளி, பூனை, எலி, ஓணான் என ஜீவராசிகள் அனைத்தும் இறைவனின் படைப்பே என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. அது பூமியின் கீழ் தோண்டப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை ‘ஆழத்துப்பிள்ளையார்’ என்று அழைக்கின்றனர்.

இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால் கல்வி, தொழில் முன்னேற்றம் அடையும். மகப்பேறில் இருக்கும் தடைகள் நீங்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும் என்று சொல்லப்படுகிறது.

அமைவிடம்

பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் பேருந்தில் ஏறி வெங்கனூரில் இறங்கியவுடன் கோவில் உள்ளது. அதுபோல் சேலத்திலிருந்து 57 கி.மீட்டர் தூரத்தில் வெங்கனூர் அமைந்திருக்கிறது.

மேலும் செய்திகள்