திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா ;கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update:2022-10-23 23:17 IST

திருவட்டார், 

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஐப்பசி திருவிழா

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை நிர்மால்யம், ஸ்ரீ பூத பலியைத் தொடர்ந்து தந்திரிகள் சங்கரநாராயணரு, சஜித் சங்கரநாராயணரு, கோகுல் ஆகியோர் கொடிமர பூஜையை நடத்தினர்.

கொடியேற்றம்

அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க, பெண்கள் குலவை ஒலிக்க, தங்கக் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு, பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஒற்றைக் கல் மண்டபத்தில் ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

கொடியேற்று விழாவில் குழித்துறை தேவசம் போர்டு சூப்பிரண்டு செந்தில்குமார், மேலாளர் மோகன் குமார், திருவட்டார் பேரூராட்சி தலைவி பெனிலா ரமேஷ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சாமி பவனி

இரவில் சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.

இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு நாராயண பாராயணமும், இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம் கதகளி, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 9மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 10 மணிக்கு தட்ச யாகம் கதகளி ஆகியவை நடக்கிறது.27-ந்தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றமும், கருட வாகனத்தில் சாமி பவனியும், நள சரிதம் கதகளி ஆகியவையும், 29-ந்தேதி இரவு 9 மணிக்கு சாமி பல்லக்கில் பவனியும், தொடர்ந்து துரியோதன வதம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது.

பள்ளிவேட்டை

31-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் நடக்கிறது. நவம்பர் 1-ந்தேதி கருட வாகனத்தில் ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்