அனுமனுக்கு அருள்புரிந்த அனுவாவி முருகன்

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, அனுவாவி என்ற ஊா். இங்குள்ள மலையின் மையப் பகுதியில், மலையும், மரங்களும் சூழ இயற்கை எழிலுடன் அமைந்திருக்கிறது, சுப்பிரமணியர் திருக்கோவில்.;

Update:2023-02-24 18:01 IST

இந்த ஆலயத்தில் அருளும் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மிகவும் பழமையானதாக கருதப்படும் இந்த ஆலயம், 1957-ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கைப் பேரழிவின் காரணமாக சிதிலமடைந்தது. ஆலயத்தில் இருந்த தலவிருட்சங்களான 5 மாமரங்களும் இயற்கை சீற்றத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதையடுத்து 1969-ம் ஆண்டு இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

மலை அடிவாரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில், மலையின் மையப்பகுதியில் சுப்பிரமணியர் ஆலயம் அமைந்திருக்கிறது. அடிவாரத்தில் இருந்து ஆலயத்தை அடைவதற்கு சுமார் 500 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். மலையில் உள்ள கோவிலுக்கு முன்பாக இடும்பன் சன்னிதி இருக்கிறது. ஆலய கருவறையில் வள்ளி- தெய்வானையுடன் சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தல முருகப்பெருமானின் தலையில், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் பூ வைத்து, ஒரு செயலை செய்யலாமா?, வேண்டாமா? என்று குறி கேட்கும் பழக்கமும் இருக்கிறது.

ஆலயத்தின் முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதியும், நவவீரர்களில் ஒருவருமான வீரபாகு அருள்கின்றனர். நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன. வடக்கு நோக்கிய ஆஞ்சநேயர், அருணாசலேஸ்வரராக, சிவபெருமான் ஆகியோரும் இருக்கின்றனர். இந்தக் கோவிலின் நேர் தென்புறத்தில் மருதமலை உள்ளது. மலைப் பகுதி வழியாக ஏறி இறங்கினால், மருதமலைைய அடையலாம்.

இந்த ஆலயத்தில் ஒரு ஊற்று நீர் வரும் சுனை உள்ளது. இதற்கான நீர் ஆரம்பம் எங்குள்ளது என்பது கண்டறியப்படவில்லை. மைசூர் மன்னன் ஒருவன் இங்குள்ள ஊற்றை, 'காணாச்சுனை' என்று பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளான். எந்த காலத்திலும் வற்றாத இந்த சுனை நீர், பக்தர்களின் தாகத்தையும் தணிப்பதாக இருக்கிறது.

ராமாயணத்துடன் தொடர்புடையதாகவும் இந்த ஆலயம் இருக்கிறது. லட்சுமணனின் மயக்கம் தெளிய, இமயமலைச் சாரலில் இருந்து மூலிகை தேவைப்பட்டது. அதற்காக சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்தபடி ஆஞ்சநேயர் வானவெளியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தாகம் ஏற்படவே, அவர் இம்மலையில் உள்ள முருகப்பெருமானை வேண்டினார். அனுமனுக்காக, தன் வேல் கொண்டு தரையில் ஒரு நீரூற்றை முருகப்பெருமான் ஏற்படுத்தினாா். அதில் தாகம் தீர்த்துவிட்டு, அனுமன் மீண்டும் புறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரத்தின் ஒரு பகுதியில் ஆஞ்சநேயருக்கு பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை வைக்கப்பட்டுள்ளது. 'ஹனு' என்பது அனுமனையும், 'வாவி' என்பது ஊற்றையும் குறிக்கும். அதன்படியே இந்த இடத்திற்கு அனுவாவி என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்