வெங்கடாஜலபதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வெங்கடாஜலபதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு;

Update:2023-01-03 00:15 IST

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவாரூர் புலிவலம் வெங்கடாஜலபதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. திருவாரூர் பெருமாள் கோவிலில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி வருகிற 11-ந்தேதி வரை நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாள் சிறப்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல் வழியாக காட்சி அளித்தார். அப்போது கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிப்பட்டனர். பாதுகாப்பு பணியில் திருவாரூர் தாலுகா போலீசார் ஈடுபட்டனர்.

ராஜகோபாலசாமி கோவில்

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 22-ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ருக்மணி, சத்தியபாமா சமேதராக வைரமுடி கிரீடம் அணிந்து அருள் பாலித்த ராஜகோபாலசாமி சொர்க்கவாசல் கதவு திறக்க உள்ளே வந்தார். சொர்க்கவாசலில் வைகுண்ட நாதனாக பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயலாளர் மாதவன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்