பெருமாள், அம்மன் கோவில்களில் குடமுழுக்கு
நாகை, திருமருகல், வாய்மேடு பகுதியில் பெருமாள், அம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
வெளிப்பாளையம்;
நாகை, திருமருகல், வாய்மேடு பகுதியில் பெருமாள், அம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெருமாள் கோவில்
நாகையை அடுத்த பாப்பாக்கோவில், அந்தணப்பேட்டையில் பூமி நீளா ரங்கநாயகா சமேத கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்து குடமுழுக்கு நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்து பணிகள் நடந்தது. பணிகள் முடிந்து நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது, தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. மாலை 2-ம் கால ஹோமம், தீபாராதனை நடந்தது. நேற்று காலை 5-ம் கால ஹோமம், மகா பூர்ணாஹூதி, கும்பம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. விழாவில் செயல் அலுவலர் சண்முகராசு, உதவி ஆணையர் ராணி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அங்காள பரமேஸ்வரி கோவில்
திருமருகலில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன. மேலும் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜை, தனபூஜை, முடிகொண்டான் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்தல், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. பின்னர் மகா பூர்ணாஹதி, கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் மூலவர் விமானத்துக்கு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர கலசத்துக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.
வாய்மேடு
வாய்மேடு உடையதேவன்காடு பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் காத்தவராய சாமி கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. விழாவில் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை வலம் வந்து கோவிலின் மேல் உள்ள கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் காமாட்சியம்மன் காத்தவராய சாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.