திற்பரப்பு அருவிக்குள் காளி குகைக்கோவில்

மகாதேவர் கோவிலின் தெற்கே உள்ள திருச்சுற்று மண்டபத்தில் இருக்கும் நிலவறை வழியாகவும் இந்த குகைக் கோவிலுக்கு பாதை உள்ளது எனவும், இந்தக் குகைக் கோவிலினுள் பத்ரகாளி தேவியின் புடைப்புச் சிற்பம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.;

Update:2023-05-09 18:47 IST

குமரிக் குற்றாலம்' என்று திற்பரப்பு அருவி அழைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இந்த அருவியைக்காண பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். அருவியில் தண்ணீர் விழும் நேரங்களில் சுற்றுலாப்பயணிகள் ஆனந்தக்குளியல் போட்டு மகிழ்கிறார்கள்.

12 சிவாலயங்களில் ஒன்று

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் நதிகளில் முக்கியமானது தாமிரபரணி. இதன் கிளை ஆறுகள் கோதையாறு மற்றும் பரளியாறு ஆகும். கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையின் கீழ் பகுதியிலிருந்து மீண்டும் புறப்பட்டு வரும் கோதையாறு திற்பரப்பு வழியாகப் பாய்ந்து திருவட்டார் அருகே மூவாற்றுமுகம் எனப்படும் இடத்தில் பரளியாற்றோடு கலந்து விடுகிறது. அது மீண்டும் தாமிரபரணி என பெயர் பெற்று நீண்ட தூரம் ஓடி அரபிக் கடலில் கலக்கிறது. திற்பரப்பில் கோதையாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்ந்து அருவியாய் விழுந்து கொண்டிருக்கிறது. இதில் பிற்காலங்களில் ஆற்றின் திசை சற்று கிழக்கு நோக்கி திருப்பப்பட்டு முழுமையான திற்பரப்பு அருவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலய ஓட்டத் திருத்தலங்களில் 3-வது சிவாலயமான திற்பரப்பு மகாதேவர் கோவில் திற்பரப்பின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. திற்பரப்பு அருவியின் அருகில் அமைந்துள்ள இந்தக் கோவிலின் மேற்கு வாசல் ஆற்றைப் பார்த்தவாறு உள்ளது. இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் 'வீரபத்திரர்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். வீரபத்திரரும், காளி தேவியும் தட்சனை வதம் செய்த பின்னர் தியானம் செய்வதற்காக திற்பரப்பில் மேற்கு நோக்கி அமர்ந்திருந்தனர் என்று இந்தக் கோவில் தலபுராணம் கூறுகிறது. பரந்து விரிந்து ஓடும் கோதையாற்றைப் பார்ப்பதற்காக மூலவர் மேற்கு நோக்கி அமர்ந்திருந்தார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். மூலவரின் எதிரே நந்தி ஒடுங்கிய நிலையில் காணப்படுகிறது.

காளி குகைக்கோவில்

சிற்பக்கலை வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக்கோவில் ஒரு கலைப்பொக்கிஷமாகும். கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிவாலய ஓட்டத்தின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது காலம், காலமாக நடைபெற்று வரும் சிறப்பான நிகழ்வாகும்.

திற்பரப்பில் மகாதேவர் கோவில் ஒரு மகாசிறப்பு என்றால், கோவிலின் அருகே திற்பரப்பு அருவிப்பகுதியில் மறைந்திருக்கும் காளி குகைக் கோவில் மற்றொரு சிறப்பு என்று உள்ளூர் மக்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். இங்கு ஒரு காளி குகைக் கோவில் அருவியின் உள்பகுதியில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அருவியின் கீழ் பகுதியிலுள்ள கல்மண்டபத்தின் எதிரே பாறையில் தென்படும் இடைவெளி தான் குகையின் முகப்பு எனவும் கூறுகின்றனர். மகாதேவர் கோவிலின் தெற்கே உள்ள திருச்சுற்று மண்டபத்தில் இருக்கும் நிலவறை வழியாகவும் இந்த குகைக் கோவிலுக்கு பாதை உள்ளது எனவும், இந்தக் குகைக் கோவிலினுள் பத்ரகாளி தேவியின் புடைப்புச் சிற்பம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் குகைக் கோவிலில் நம்பூதிரிகள் தாந்திரீக பூஜைகள் செய்ததாகவும் செவிவழிச் செய்திகள் உலாவுகின்றன.

தொல்லியல் துறையினர் ஆய்வு

1928 -ம் ஆண்டு வாக்கில் இப்பகுதியில் பெருமழை பெய்து கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. பின்னர் ஆறு வற்றியது. அப்போது அருவியின் அருகே ஒரு குகை இருப்பது பற்றிய செய்தி ஊர் முழுவதும் பரவியது. திற்பரப்பை சேர்ந்த சிலர் தீ பந்தத்துடன் குகைக்குள் நுழைந்தனர். அவர்கள் குகை விரிந்து கோவிலாக மாறுவதைக் கண்டனர். அங்கே உள்ள பாறையில் பத்ரகாளி புடைப்புச் சிற்பமாக இருப்பதையும் அவர்கள் கண்டனர். இதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் தொல்லியல் ஆய்வாளர்கள் குகையைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

காளி குகைக் கோவிலின் முகப்பு பகுதி 2.10 மீட்டர் உயரமும், 90 செ.மீ. அகலமும் கொண்டது. அதன் வழியாக உள்ளே சென்றால் குகையின் உள்ளே செல்வதற்கான பாதை உள்ளது. இந்தப்பாதை 45 மீட்டர் வரை

நீள்கிறது. இந்தப் பாதையின் இரண்டு புறமும் வாசல்கள் உள்ளன. இதில் வலதுபுற வாசலையடுத்து 4.50 மீட்டர் நீளமும், 2.15 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட சிறிய அறை உள்ளது. இதில் பத்ரகாளி புடைப்பு சிற்பம் உள்ளது. இந்த அறையின் எதிரே உள்ள வாசலைத் தொடர்ந்து 6.25 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் 2.10 மீட்டர் உயரமும் கொண்ட அறை இருக்கிறது.

நகைகள் கிடைக்கும்

இந்த அறையில் பூஜைகள் நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. இதன் இறுதிப் பகுதி 60 செ.மீ. அகலமுடையதாக உள்ளது. இப்பாதையின் முடிவில் 24 மீட்டர் நீளம் 6 மீட்டர் அகலம் 2.50 மீட்டர் உயரமுடைய விசாலமான கூடம் உள்ளது. இந்தக் கூடம் அருவி பாயும் இடத்திலிருந்து 180 மீட்டர் தூரத்தில் உள்ளது. மகாதேவர் கோவிலின் தெற்கே உள்ள திருச்சுற்று மண்டபத்திலிருந்து இக்குகை கோவிலுக்கு இருந்த நிலவறை தற்போது மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அருவியின் அருகே குகையின் முன்பகுதியிலுள்ள ஆழமான ஆற்றுப்பகுதியை இப்பகுதி மக்கள் 'பத்ரகாளி கயம்' என்று கூறுகின்றனர்.

இந்த குகைக் கோவில் தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு கதைகள் பேசப்படுகின்றன. அதில், இந்த ஊரில் உள்ளவர்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நகைகள் அணிந்து செல்ல வேண்டுமென்றால், குகையின் முன்னே வந்து கண்களை மூடிக்கொண்டு நிற்பார்களாம். அப்போது ஒரு தட்டில் தங்கநகைகள் வருமாம். பின்னர் அவசியம் முடிந்த பின்னர் அந்த நகைகளை குகையின் வாசலில் வைத்துவிட்டுப் போவார்களாம். இதில் ஒருமுறை நகையை திரும்பி வைக்கச் சென்ற ஒருவர் என்ன நடக்கிறதென்று பார்ப்பதற்காக அங்கு மறைந்து நின்றாராம். அப்போது பொன்னிற துறவி ஒருவர் வருவதைக்கண்டு, கண்டேன்... கண்டேன்... என சத்தமிட்டாராம். உடனே குகையின் வாசல் அடைக்கப்பட்டு விட்டதாம். இந்த சம்பவம் செவி வழிச்செய்தியாக கூறப்படுகிறது.

திற்பரப்பு அருவிப் பகுதியில் உள்ள காளி குகைக்கோவில் குறித்து தொல்லியல் துறையினர் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஆய்வு செய்து, கோவில் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்