சென்னிமலை, கோபி, அந்தியூர் பகுதி முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா

சென்னிமலை, கோபி, அந்தியூர் பகுதி முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.;

Update:2022-06-13 02:07 IST

சென்னிமலை, கோபி, அந்தியூர் பகுதி முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாக திருவிழா

சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் முருகனுக்கு உகந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று வழிபாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 66-வது ஆண்டாக வைகாசி விழா நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் பக்தர்கள் சென்னிமலையில் இருந்து புறப்பட்டு ஊஞ்சலூர் அருகே சென்று காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் நேற்று காலையில் பக்தர்கள் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடங்களுடன் புறப்பட்டு படிக்கட்டுகள் வழியாக மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு கலச ஸ்தாபனம், 108 சங்கு ஸ்தாபனம், ஜெபம் ஹோமம் பூஜை ஆகியவை நடைபெற்றது.

சாமி தரிசனம்

மேலும் முருகப்பெருமானுக்கு அன்னாபிஷேகம், சந்தன அபிஷேகம் ஆகியவையும் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார். பின்னர் மாலையில் மகா தீபாராதனை, சாமி புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் அருணகிரிநாதர் மடம் கிருத்திகை விசாக குழுவினர் சார்பில் அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோபி

இதேபோல் கோபியில் உள்ள பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சாமி கோவிலில் நேற்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார். பின்னர் மாலை 4 மணி அளவில் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது பெருமாள் கோயில் வீதி, கடைவீதி வழியாக வந்து மீண்டும் நிலை சேர்ந்தது.

இன்று (திங்கட்கிழமை) பாரிவேட்டை, கிளி வாகன காட்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) தெப்போற்சவமும், நாைள மறுநாள் சாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 16-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

பச்சை முருகன் கோவில்

கோபி பச்சைமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு சாமிக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பால்குட அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணி அளவில் சத்குரு சம்ஹரா யாகமும், 1 மணி அளவில் மகா அபிஷேகமும், 2 மணி அளவில் மகா தீபாராதனையும் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமி அருள்பாலித்தார்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோபி, கரட்டூர்நாயக்கன் காடு, பாரியூர், காசிபாளையம், நல்லகவுண்டன்பாளையம், கொளப்பலூர், கெட்டிசெவியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை வழிபட்டு சென்றனர்.

அந்தியூர்

அந்தியூர் தேர் வீதியில் மிகவும் பிரசித்தி பெற்றதும், புகழ் பெற்றதுமான பாலதண்டாயுதம் சாமி கோவில் உள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று முருகபெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடந்தது. இதில் அந்தியூர், தவிட்டுபாளையம், புதுப்பாளையம், வெள்ளையம்பாளையம், சந்தியபாளையம், பச்சாம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

ஆப்பக்கூடல் மலை கோவிலில் அமைந்துள்ள கணேச பாலதண்டாயுத சாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஆப்பக்கூடல், கவுந்தப்பாடி, அத்தாணி, ஜம்பை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்