ஆசிரியர் பணியின் உயரிய விருது

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5–ந்தேதி மறைந்த ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளன்று இந்தியா முழுவதும் ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

Update: 2018-09-09 22:30 GMT
வ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5–ந்தேதி மறைந்த ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளன்று இந்தியா முழுவதும் ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாகவும், 2–வது ஜனாதிபதியாகவும் பணியாற்றியவர். ஆனால், அவர் எப்போதும் தான் ஆசிரியர் பணியில் இருந்ததையே தனது பெருமையாக கூறுவார். 1962–ம் ஆண்டு அவர் ஜனாதிபதியான நேரத்தில், அவரது மாணவர்கள் செப்டம்பர் 5–ந்தேதி அவரது பிறந்தநாளைக் கொண்டாட அவரது அனுமதியைக் கேட்டனர். உடனே அவர் எனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம். அதற்கு பதிலாக, அன்றைய தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன் என்றார். அவரது விருப்பப்படி, அன்று முதல் இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5–ந்தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினத்தையொட்டி மாநில அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. தேசிய அளவில் ஆண்டுதோறும் இதுவரையில் நாடு முழுவதிலும் இருந்து 345 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு மொத்தமே 45 ஆசிரியர்களுக்குத்தான் இந்த விருதுகள் டெல்லியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவால் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் வாழ்க்கையை செழுமையாக்குதல், ஆசிரியர் பணியைக்கொண்டாடுதல் போன்ற பல நோக்கங்களுக்காக இந்த விருதுக்குரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், இதுவரையில் ஆண்டுக்கு சற்றேறக்குறைய 25 ஆசிரியர்கள் விருதுகள் வாங்கி வந்தநிலையில், இந்த ஆண்டு ஒரேயொரு ஆசிரியருக்குத்தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரான ஆர்.ஸதி இந்த விருதைப்பெற்று தமிழகத்துக்கே பெருமை தேடித்தந்து இருக்கிறார். அந்த கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க 6 மாணவர்களைக் கொண்ட குட்டி கமாண்டோ படை அமைத்தது உள்பட பல சீர்திருத்தங்களை அவர் செய்ததால்தான் இந்த விருதை பெற்று இருக்கிறார். ஆசிரியர் ஸதி இந்த விருதை பெற்றது பெருமையாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் மட்டுமே இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுதான் மிகப்பெரிய குறையாக கருதப்படுகிறது.

இந்தியா முழுவதும் முன்புபோல 345 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்படவேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால் இது மிகவும் பெருமைக்குரிய விருது. மேலும் இந்த ஆண்டு இந்த விருதை பெறுவதற்குரிய தகுதிகளுக்காக புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. முதல்முறையாக ஆசிரியர்கள் தாங்களாகவே நேரடியாக விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று இருந்தநிலை மாற்றப்பட்டு, குறைந்தபட்ச அனுபவம் தேவையில்லை, தகுதியுள்ள இளைய தலைமுறையினரும் விண்ணப்பிக்கலாம் என்ற புதிய விதிமுறை நிச்சயமாக வரவேற்கத்தகுந்தது. இந்த விருதின் பெருமையை நிலைநிறுத்த, விருதுபெறுவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது ஏற்புடையதே. ஆசிரியர் பணியில் மிகவும் புகழுக்குரிய இந்த தேசிய விருதுகளை பெறுவதற்கான தகுதிகளை தமிழ்நாட்டில் மேலும் பலர் அடைய வேண்டும்.

மேலும் செய்திகள்