மத்திய–மாநில அரசுகள் அமைதி காப்பது ஏன்?

பெட்ரோல்–டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது என்று தினமும் பத்திரிகைகளில் பிரசுரிக்கவேண்டிய அளவிற்கு, கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது.

Update: 2018-09-10 21:30 GMT
சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் ரூ.83.66 ஆக இருந்த பெட்ரோல்–விலை, நேற்று ரூ.83.97 ஆக உயர்ந்தது. இதேபோல ரூ.76.75 ஆக இருந்த டீசல் விலை, நேற்று ரூ.77.04 ஆக உயர்ந்துவிட்டது. சமூகவலைத்தளங்களில் வேதனை கலந்த செய்திகள் இந்த விலை உயர்வைப்பற்றி வெளியிடப்படுகிறது. பிறந்தநாள் வாழ்த்தாக, ‘‘உங்கள் ‘மகிழ்ச்சி’ பெட்ரோல்–டீசல் விலையைப்போல உயரவேண்டும். உங்கள் கவலைகள் எல்லாம் இந்திய ரூபாய் மதிப்பைப்போல சரியவேண்டும்’’ என்று வெளியிடப்பட்டுள்ளது. மற்றொரு ‘மீம்சில்’, ‘‘யார் முதல் செஞ்சூரி அடிக்கப்போகிறார்கள். ‘பெட்ரோல் –டீசல்’ விலையா?, ரூபாய் மதிப்பு சரிவா?’’ என்றும் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது கேட்பதற்கு தமாஷாக இருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்தின் ஆழத்திலும் இருந்துவரும் பாதிப்பு குரல்களாகும். 

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல்–டீசல் விலையாலும், ரூபாய்நோட்டு மதிப்பு சரிவாலும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரத்தொடங்கிவிட்டன. மத்திய–மாநில அரசுகள் பெட்ரோல்–டீசல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதுதான் வேதனையின் உச்சக்கட்டமாக இருக்கிறது. ‘‘பெட்ரோல்–டீசல் விலையை நாங்கள் நிர்ணயிப்பதில்லை. சர்வதேச கச்சாஎண்ணெயின் விலையையும், ரூபாயின் மதிப்பை பொருத்துதான் விலை நிர்ணயிக்கப்படுகிறது’’ என்கிறார்கள். இந்திய நாட்டின் ஒட்டுமொத்த 83 சதவீத பெட்ரோல் தேவை இறக்குமதி மூலமே சமாளிக்கப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மைதான். ஆனால், 2008–ம் ஆண்டு கச்சாஎண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 132 அமெரிக்க டாலராக இருந்தபோது, பெட்ரோல் விலை ஏறத்தாழ ரூ.51 ஆகத்தான் இருந்தது. 2016 ஐனவரி மாதத்தில் கச்சாஎண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 30.53 அமெரிக்க டாலராக இருந்தபோது, பெட்ரோல் விலை லிட்டர் ரூ.60–யை தாண்டியிருந்தது. இதுபோல 2014–ம்ஆண்டு மே மாதத்தில் கச்சாஎண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 108 அமெரிக்க டாலராக இருந்தநேரத்தில், பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டர் ரூ.72.14 ஆக இருந்தது. நேற்று கச்சாஎண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 72.12 அமெரிக்க டாலராக இருந்தபோது, பெட்ரோல் விலை லிட்டர் ரூ.84 ஆக இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. 

ரூபாய் நோட்டின் மதிப்பு நேற்று அமெரிக்க டாலருக்கு ரூ.72.42 காசுகளாக இருந்தது. இதை ஒரு காரணமாக சொன்னாலும் தாங்கக்கூடிய அளவிற்குதான் பெட்ரோல்–டீசல் விலையை மக்களால் தாங்கமுடியும். மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கூடாதா? என்று மக்கள் ஏங்குகிறார்கள். இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் நேற்று இந்த விலைஉயர்வை எதிர்த்து கடையடைப்பு நடத்தினர். ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல்–டீசல் மீதான மதிப்புக்கூட்டுவரி 4 சதவீதம் குறைக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவிலும் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கம், ‘‘மாநில அரசுகள் மதிப்புக்கூட்டுவரியை குறைக்கவேண்டும் என்றும், மாநில அரசுகள், ‘‘மத்திய அரசாங்கம் கலால்வரியை குறைக்கவேண்டும்’’ என்றும் ஒருவர்மீது ஒருவர் பழியை போடுவதை தவிர்த்து, இருவருமே விலையை குறைக்கும் வகையில் தங்கள்–தங்கள் வரியை குறைத்தால் மட்டுமே மக்களை இந்த சுமையில் இருந்து காப்பாற்ற முடியும்.

மேலும் செய்திகள்