ஆபரணமாக மட்டும் அல்ல, அவசரத்துக்கும் உதவும் தங்கம்!

சரித்திர காலம் தொட்டு, தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. இன்றைக்கும் திருமணம் பேசும்போது, எவ்வளவு கஷ்டப்பட்ட வீடுகள் என்றாலும் சரி, பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுகிறீர்கள்? என்று கேட்பது வழக்கம்.

Update: 2021-12-19 20:16 GMT
சரித்திர காலம் தொட்டு, தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. இன்றைக்கும் திருமணம் பேசும்போது, எவ்வளவு கஷ்டப்பட்ட வீடுகள் என்றாலும் சரி, பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுகிறீர்கள்? என்று கேட்பது வழக்கம். தங்கம் என்பது பெண்களின் ஆபரணத்துக்காக மட்டுமல்லாமல், ஆத்திர அவசர பணத் தேவைக்கு கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக கருதப்படுகிறது. குறிப்பாக, விவசாய குடும்பங்களில் சாகுபடியை தொடங்கும்போது, செலவுகளுக்காக தங்கத்தை அடகுவைத்து பணம் ஈட்டுவதும், அறுவடை காலங்களில் விளை பொருட்களை விற்று அதை மீட்பதும் வாடிக்கையாக இருக்கிறது.

அவசர தேவைகளுக்கு மற்ற கடன்களை பெறவேண்டும் என்றால், வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் பல கடுமையான நடைமுறைகள் உண்டு. ஆனால், நகைக்கடனை எளிதாக பெற்றுவிட முடியும். கொரோனா பாதிப்பு குறைந்து பொருளாதாரம் மீண்டெழும் நிலையில், தற்போது சிறிய அளவிலான வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் கைவிட்ட தொழிலை திரும்ப தொடங்குவதற்கும், நலிந்த தொழிலை மேம்படுத்துவதற்கும் தேவையான மூலதன செலவுகளுக்காகவும், மக்கள், விவசாயிகள் அவசர தேவைகளுக்காகவும் நகையை அடகுவைத்து பெறும் கடன்களின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது.

வங்கிகளை பொறுத்தமட்டில், இந்தியாவில் தொழில் கடன்களுக்கான தொகை அதிகமாக இதுவரை இருந்த சூழ்நிலையில், முதல்முறையாக தனிநபர் கடன்கள் தொழில்கடன்களை மிஞ்சிவிட்டது. கடந்த செப்டம்பர் மாத இறுதிக்கணக்குப்படி, தொழில் கடன்கள் மார்ச் மாதம் வழங்கப்பட்ட அளவைவிட ரூ.66,239 கோடி குறைந்துவிட்டது. அதேநேரத்தில், தனிநபர் கடன்கள் ரூ.73,011 கோடி அதிகரித்துவிட்டது. தனிநபர்களுக்கான கடன்களில் பெரும்பாலானவை நகைக்கடன்களாகத்தான் இருக்கிறது. நகைக்கடன்களும், மோட்டார் வாகன கடன்களும் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி கணக்குப்படி, வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் ரூ.63,770 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.40,086 கோடியாகத்தான் இருந்திருக்கிறது.

இது, ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலாண்டிலும் நகைக்கடன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் நகைக்கடன் வாங்குவதும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில், மக்கள் நகைகள் வாங்குவதும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்வதை மக்கள் சிறந்த முதலீடாகவும், லாபம் தரும் முதலீடாகவும் பார்ப்பது மட்டுமல்லாமல், ஆத்திர அவசரத்துக்கு கைகொடுக்கும் முதலீடாகவும் கருதுகிறார்கள். இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில், தங்கத்தின் தேவை 139.1 டன்னாக இருந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 94.6 டன்னாகத்தான் இருந்தது.

இத்தகைய சூழ்நிலையில், தங்கம் இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. தங்க நகைகள் வாங்கியதும் இந்த 3 மாதங்களில் ரூ.41,030 கோடியாக இருந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.27,750 கோடியாகத்தான் இருந்துள்ளது. பொருளாதார நிபுணர்கள் தங்கம் விற்பனை அதிகரித்திருப்பதையும், நகைக்கடன்கள் அதிகரித்திருப்பதையும் மதிப்பீடு செய்யும்போது, கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டெழும் நல்ல அறிகுறியாகத்தான் கருதுகிறார்கள்.

தங்கத்தின் மீது மக்களுக்கு இப்போது நாட்டம் அதிகமாகிவிட்டது. தங்கநகை வாங்குபவர்களை கழுகுக் கண்கொண்டு பார்க்கும் வருமான வரித்துறை, சற்று கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும். தங்கத்துக்கு இப்போது இறக்குமதி வரியாக 10.75 சதவீதமும் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் கடத்தல் தங்கம் அதிகமாக வருகிறது என்றும், இந்த இறக்குமதி வரியை 5 சதவீதமாகவோ, 3 சதவீதமாகவோ குறைத்துவிட்டால், தங்க கடத்தலை பெருமளவில் தடுத்துவிடலாம் என்றும் நகை வியாபாரிகள் கருதுகிறார்கள்.

இதுபோல, சரக்கு சேவை வரியாக, நகை விற்பனைக்கு இப்போது விதிக்கப்படும் 3 சதவீத வரியை 1 சதவீதமாக குறைத்துவிட்டால் வரி ஏய்ப்பு இருக்காது. இந்த இரண்டையும் செய்தால் அரசுக்கும் வருவாய் அதிகமாக கிடைக்கும், வரி ஏய்ப்பும் இருக்காது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

மேலும் செய்திகள்