கிரிக்கெட்
கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டும் - சென்னை கேப்டன் டோனி

கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டும் என சென்னை கேப்டன் டோனி தெரிவித்தார்.
புனே,

‘டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எங்களது கடைசி கட்ட பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. அதில் முன்னேற்றம் காண வேண்டும்’ என்று சென்னை அணி கேப்டன் டோனி தெரிவித்தார்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் நேற்று முன்தினம் இரவு நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி 6-வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 78 ரன்னும் (40 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன்), கேப்டன் டோனி ஆட்டம் இழக்காமல் 51 ரன்னும் (22 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன்), அம்பத்தி ராயுடு 41 ரன்னும் (24 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் அமித் மிஸ்ரா, விஜய் சங்கர், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. ரிஷாப் பான்ட் 79 ரன்னும் (45 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன்), விஜய் சங்கர் ஆட்டம் இழக்காமல் 54 ரன்னும் (31 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்சருடன்) எடுத்து சென்னை அணிக்கு கலக்கம் கொடுத்தனர். சென்னை அணி தரப்பில் கே.எம்.ஆசிப் 2 விக்கெட்டும், நிகிடி, ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதுகுவலி காரணமாக நான் அதிகம் பயிற்சி செய்வதில்லை. 20 ஓவர் போட்டியில் அதிக பணிச்சுமை கிடையாது. எனவே அதனை எளிதில் நிர்வகிக்க முடியும். அணிக்கு நல்ல தொடக்கம் அமைய வேண்டியது முக்கியமானது. அதாவது ரன் குவிப்பு மட்டுமின்றி நல்ல பார்ட்னர்ஷிப் அமைய வேண்டும். அப்படி அமைந்தால் நான் முன்வரிசையில் களம் இறங்கி விளையாட முடியும். நான் முன்வரிசையில் களம் இறங்குவதால் எனக்கு பின்னரும் ஒரு பேட்ஸ்மேன் களம் இறங்க இருப்பார். அதனால் என்னால் தைரியமாக அடித்து விளையாட முடியும். கடைசியில் ஆடுவதை விட மிடில் ஓவர்களில் களம் இறங்கினால் அடித்து ஆடுவது எளிதாக இருக்கும். அத்துடன் பந்து வீச்சாளருக்கு எப்போது நாம் பெரிய ஷாட் ஆடுவோம் என்பதை கணிக்க முடியாது.

ஆடுகளத்தை பார்த்ததும் வெளிநாட்டு பேட்ஸ்மேன் வேண்டும் என்பதை உணர்ந்தோம். சாம் பில்லிங்ஸ்க்கு ஓய்வு தேவைப்படுவதால் தொடக்க வீரராக பாப் டுபிளிஸ்சிஸ்சை களம் இறக்க முடிவு செய்தோம். அம்பத்தி ராயுடு நடுவரிசையில் களம் இறங்குவதால் பேட்டிங் வலுப்பெறும். அம்பத்திராயுடு அணியின் தேவைக்கு ஏற்ப எந்த வரிசையிலும் களம் இறங்கக்கூடிய வீரர். ஷர்துல் தாகூர் நல்ல நிலையில் இல்லாததால் அவருக்கு சற்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நிகிடிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் என்னை கவர்ந்த பந்து வீச்சாளர்.

 நாங்கள் வெளியேற்றுதல் சுற்று மற்றும் இறுதிப்போட்டியை மனதில் கொள்ள வேண்டும், ஏனெனில் அந்த ஆட்டங்கள் சிறிய மைதானத்தில் நடைபெறுகிறது. எனவே அந்த ஆட்டங்களில் தவறுகள் அதிகம் இழைக்கக்கூடாது. மொத்தத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களது கடைசி கட்ட பந்து வீச்சு சரியாக அமையவில்லை. அதில் முன்னேற்றம் காண வேண்டும். பந்து வீச்சாளர்கள் தேவைக்கு தகுந்தபடி தங்களை மாற்றி கொள்ள வேண்டும். இல்லையெனில் நாங்கள் மாற்று வாய்ப்பு குறித்து யோசிக்க வேண்டும் இவ்வாறு டோனி கூறினார்.

தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து தெரிவிக்கையில், ‘வெற்றி இலக்கு பெரிதாக இருந்தது. முதல் பந்தில் ஷேன் வாட்சனுக்கு எதிராக எல்.பி.டபிள்யூ. அப்பீல் செய்தோம். அதற்கு நடுவர் அவுட் கொடுத்து இருந்தால் பெரிய திருப்புமுனையாக இருந்து இருக்கும். ஷேன் வாட்சனின் இன்னிங்ஸ் ஆட்டத்தை முழுமையாக மாற்றியது. ஷேன் வாட்சன் எதிர்கொண்ட முதல் பந்து பேடில் பட்டு தான் பேட்டில் பட்டதாக நாங்கள் அனைவரும் நினைத்தோம். நாங்கள் வெற்றி இலக்கை நெருங்கி வந்தது அடுத்த ஆட்டத்துக்கு நல்ல உத்வேகத்தை அளிக்கும். பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க நாங்கள் எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். நாங்கள் தவறுகளை கண்டுபிடித்து அதனை சரி செய்து பலமாக திரும்ப வேண்டும். அணி நிர்வாகத்திடம் பேசி நிலையாக செயல்படும் வகையில் அணியில் மாற்றம் செய்யப்படும். வரும் ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்’ என்றார்.

சென்னை அணியின் 100-வது வெற்றி

* ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தது இது 16-வது முறையாகும். இதன் மூலம் அதிக முறை 200 ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை சென்னை பெற்றுள்ளது.

* டெல்லி அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் போட்டியில் 100-வது வெற்றியை பதிவு செய்தது. அதாவது ஐ.பி.எல். போட்டியில் 85 வெற்றியையும், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 15 வெற்றியையும் பெற்றுள்ளது. இந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி 105 வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி 2 ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் 100 வெற்றியை கண்டு அசத்தி இருக்கிறது.

* இந்த சீசனில் சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு ரன்-அவுட் ஆவது 4-வது தடவையாகும். வேறு எந்த பேட்ஸ்மேனும் இதற்கு அதிகமாக ‘ரன்-அவுட்’ ஆகவில்லை.