பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் பாராட்டு

பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் பாராட்டினார்.

Update: 2018-05-03 23:15 GMT
புதுடெல்லி,

‘ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்’ என்று டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு தெரிவித்தார்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடைசி பந்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.

மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய டெல்லி அணி 17.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்து இருந்த போது மழையால் மீண்டும் ஆட்டம் பாதிக்கப்பட்டது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷாப் பான்ட் 69 ரன்னும் (29 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்னும் (35 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) பிரித்வி ஷா 47 ரன்னும் (25 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன்) எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், தவால் குல்கர்னி, ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

மழை நின்றதும் சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவர்களில் 151 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. புதிய இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர் (67 ரன்கள், 26 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன்), டார்சி ஷார்ட் (44 ரன்கள், 25 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன்) ஆகியோர் அதிரடியாக ஆடி டெல்லி அணிக்கு பீதி ஏற்படுத்தினார்கள். அவர்களை அடுத்து களம் இறங்கிய வீரர்கள் சோபிக்கவில்லை. கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. டெல்லி அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டும், அமித் மிஸ்ரா, மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். டெல்லி அணி வீரர் ரிஷாப் பான்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில், ‘இக்கட்டான சூழ்நிலையில் வந்த இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆடுகளம் அருமையாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் எடுத்தால் கூட குறைவான ஸ்கோர் தான். எங்களது பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினார்கள். நான் ஒரு கேட்ச்சை தவற விட்ட போதிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். பிரித்வி ஷா நல்ல தொடக்கமும், மிடில் ஓவரில் ரிஷாப் பான்ட் அதிரடியாக ஆடி முக்கிய பங்களிப்பையும் அளித்தனர். எல்லா ஆட்டங்களிலும் நாங்கள் வெற்றி பெற வேண்டியது முக்கியமானதாகும். எங்கள் வீரர்கள் அனைவரும் நல்ல நம்பிக்கையுடன் உள்ளனர். இதுபோன்ற சிறிய மைதானங்களில் பந்து வீசுவது கடினம். பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட ஆரம்பித்து விட்டால் சிறிய மைதானங்களில் கட்டுப்படுத்துவது கடினமானதாகும்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே கருத்து தெரிவிக்கையில், ‘இந்த ஆட்டத்தில் நாங்கள் தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம். ஜோஸ் பட்லரின் பேட்டிங் அற்புதமாக அமைந்தது. ஆடுகளம் நன்றாக இருந்தது. எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாத வகையில் பந்து வீச முயற்சித்தோம். அந்த திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை. எங்களுக்கு இன்னும் அடுத்த சுற்று வாய்ப்பு உள்ளது. ஜோஸ்பட்லர் அபாயகரமான வீரர். அவர் பார்மில் இருப்பது எங்களுக்கு நல்ல விஷயமாகும். எங்களது எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்று ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’ என்றார்.

மேலும் செய்திகள்