டி.வி.யில் மற்ற நிகழ்ச்சிகளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த ஐ.பி.எல்.

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா டி.வி.யில் மற்ற நிகழ்ச்சிகளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்துக்கு அமோக வரவேற்பு உள்ளது.

Update: 2018-05-05 23:45 GMT
சென்னை,

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஆக்கி என்றாலும், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் விளையாட்டு கிரிக்கெட் தான். உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம். ஆனால் இந்தியாவில் ஐந்தில் 4 பேர் கிரிக்கெட் பார்க்கிறார்கள் என்பதே கிரிக்கெட் விளையாட்டின் மீதான இந்தியர்களின் காதலுக்கு சான்று. அதனால் தான் என்னவோ நமது நாட்டின் 2-வது தேசிய விளையாட்டாகவே கிரிக்கெட் போட்டி பார்க்கப்படுகிறது.

ஒருநாள், டெஸ்ட் என்ற 2 வகை பரிமாணத்தில் மட்டுமே பயணித்து வந்த கிரிக்கெட்டை, அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றது 20 ஓவர் போட்டி தான். பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் பஞ்சமில்லாத இந்த கிரிக்கெட் போட்டி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. அதிலும் ஐ.பி.எல். என்னும் இந்தியன் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்களின் ரசனைக்கும், கொண்டாட்டத்துக்கும், உற்சாகத்துக்கும் பெரும் தீனி போட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டித்தொடர் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கியது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஐ.பி.எல். போட்டித்தொடர் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் விரும்பும் அணியாக வாகை சூடிக்கொண்டிருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

டோனி தலைமையில் களமிறங்கி பட்டையை கிளப்பி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் வரவேற்பு அமோகமாகவே இருக்கிறது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருப்பதால் மாலையில் ஐ.பி.எல். போட்டி தொடங்கியதும் எல்லோரும் டி.வி.க்கள் முன்பு குஷியாக அமர்ந்துவிடுகின்றனர். சீரியல் உள்ளிட்ட பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை புறந்தள்ளி விட்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தான் பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள். இதனால் டி.வி.யில் மவுசு அதிகரித்து ஐ.பி.எல். போட்டி தான் ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கிறது. அதுவும் சென்னை அணி விளையாடுகிறது என்றால் சொல்லவே வேண்டாம். கடைசி பந்து வரை கண்டு மகிழ்கிறார்கள். போட்டி தொடங்கி முடியும் வரை வீட்டிலேயே சமத்து பிள்ளையாக இருப்பதால் பெற்றோரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். பல வீடுகளில் பெற்றோரும் கண்விழித்து கிரிக்கெட்டை பார்த்து ரசிக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் ஆர்ப்பரித்து மகிழ்கிறார்கள்.

அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வேலை நேரங்களில் அடிக்கடி செல்போனில் கிரிக்கெட் ஸ்கோர் பார்த்துக்கொள்ளவும் தவறுவதில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து வருவதால் ஏராளமானோர் வீடுகளில் சீரியல்களுக்கு தற்காலிக ஓய்வு தரப்பட்டு இருக்கிறது. அதிலும் சென்னை அணி ஆடும் நாட்களில் டி.வி.க்கள் முன்பு சரணாகதி ஆகி விடும் பிள்ளைகள், தங்களது அம்மாக்களை டி.வி. பக்கம் நெருங்க விடுவதே இல்லை. எந்த சூழ்நிலையிலும் டி.வி.யின் ரிமோட் கைமாறாதபடி ஜாக்கிரதையாக பார்த்து கொள்கிறார்கள். அதேநேரம் செல்போனில் ஸ்கோரை பார்த்து ஆறுதல் அடையும் ரசிகர்களையும் கணக்கிட முடியாது.

கடைசி பந்து வரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகரும் ஐ.பி.எல். போட்டிக்கு ரசிகர்கள் எண்ணிக்கை பெருகி வருவதை யாராலும் மறுக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பலவித போராட்டங்கள் வெடித்தன. எத்தனை போராட்டங்கள் வந்தாலும் மஞ்சள் நிற சீருடையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ஆடிய ஆட்டத்தை பார்க்க திரண்டு வந்த ரசிகர் பட்டாளத்தையும், புனேயில் சென்னை அணியின் ஆட்டத்தை பார்க்க சிறப்பு ரெயில் மூலம் உற்சாகமாக ரசிகர்கள் சென்றதையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.

இப்படி எல்லா தரப்பினரையும் தன்னகத்தே கட்டிப்போட்டு இருக்கும் ஐ.பி.எல். போட்டிக்கு ஆண்டுக்கு ஆண்டு ஆதரவும், வரவேற்பும் பெருகி தான் வருகிறது. சென்னை அணியை தன் சொந்த அணியாகவே ரசிகர்கள் பாவிக்க தொடங்கிவிட்டனர். வெற்றி அடைந்தால் மனதார வாழ்த்துவதும், தோல்வி அடைந்தால் மீம்ஸ்கள் மூலம் வறுத்தெடுப்பதுமாக தேசிய அணிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சென்னை அணிக்கு ரசிகர்கள் அளித்து வருகிறார்கள்.

பரபரப்புக்கும், அதீத எதிர்பார்ப்புக்கும் பஞ்சமில்லாத ஐ.பி.எல். திருவிழா, ரசிகர்களின் முக்கிய பெருவிழாவாக மாறிவிட்டது. இங்கிலாந்தில் தோன்றினாலும் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் விளையாடப்படும் கிரிக்கெட் விளையாட்டுக்கு, ஐ.பி.எல். திருவிழா சரியான தீனி அளித்திருக்கிறது. கோடை வெயிலிலும் ரசிகர்களுக்கு முழு நேர குளிர் ஜுரத்தை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொடுக்கிறது என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்