ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Update: 2018-05-06 23:30 GMT
ஐதராபாத், 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் இன்று (திங்கட்கிழமை) இரவு நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கனே வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் ஆடி 7 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது இல்லை.

விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி 9 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கிய நிலையில் உள்ளது. எஞ்சிய லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் பெங்களூரு அணி உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி கண்டது.

ஐதராபாத் அணியின் பந்து வீச்சு நல்ல நிலையில் உள்ளது. ரஷித் கான், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் நன்றாக பந்து வீசி வருகிறார்கள். முதலில் பேட்டிங் செய்து குறைந்த ஸ்கோர் எடுத்தால் கூட அந்த ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்தும் வலிமை கொண்ட அணியாக ஐதராபாத் விளங்கி வருகிறது. டெல்லிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பேட்டிங்கில் கனே வில்லியம்சன், அலெக்ஸ் ஹாலெஸ், ஷிகர் தவான், யூசுப் பதான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

பெங்களூரு அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி நல்ல பார்மில் இருக்கிறார். கடந்த லீக் ஆட்டத்தில் பார்த்தீவ் பட்டேல் அரை சதம் அடித்தார். டிவில்லியர்ஸ், பிரன்டன் மெக்கல்லம், மன்தீப்சிங், கிரான்ட்ஹோம் ஆட்டம் இன்னும் எடுபடவில்லை. பந்து வீச்சில் உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும் கடைசி கட்ட பந்து வீச்சு அந்த அணிக்கு கவலை அளிக்கும் விதத்தில் தான் உள்ளது. அதில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

அடுத்த சுற்றுக்கு முன்னேற ஐதராபாத் அணி முனைப்பு காட்டும். தோல்வி கண்டால் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோகும் என்பதால் பெங்களூரு அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் அணி 6 முறையும், பெங்களூரு அணி 4 தடவையும் வென்று இருக்கின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் மோதுவது இது முதல்முறையாகும்.

மேலும் செய்திகள்