விளையாட்டு துளிகள்...

புனேவில் நேற்று முன் தினம் நடந்த லீக் ஆட்டத்தில் போட்டி முடிந்ததும் தனது காலில் விழுந்த ரசிகரை தோனி கண்டித்துள்ளார்.

Update: 2018-05-06 22:00 GMT
*டோனியின் ஆட்டம் நல்ல அறிகுறியாகும் -விராட்கோலி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் டோனி சிறப்பாக விளையாடி வருவதை, பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘டோனி அடித்து ஆடுவதை பார்க்க அருமையாக இருக்கிறது. அவருடைய இத்தகைய ஆட்டத்தை எல்லோரும் விரும்பி பார்ப்பார்கள். இது இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும். அவரது ஆட்டம் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.


*தண்டனைக்கு ஆளான வீரர்கள் அணியில் மீண்டும் இடம் பிடிப்பார்கள் -லீமான்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலகிய டாரென் லீமான் அளித்த ஒரு பேட்டியில், ‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடை விதிப்பு தண்டனைக்கு ஆளான ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான் கிராப்ட் ஆகியோருடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். அவர்களின் தவறை எல்லோரும் மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன். சிறந்த வீரர்களான அவர்கள் 3 பேரும் ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

*காலில் விழுந்த ரசிகரை கண்டித்த டோனி

புனேயில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி, பெங்களூருவை வீழ்த்தியது. இந்த ஆட்டம் முடிந்ததும் டோனியின் ரசிகர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி மைதானத்துக்குள் புகுந்தார். பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் அந்த ரசிகரை அப்புறப்படுத்த முயன்றனர். டோனியை போல் டிசர்ட் அணிந்து இருந்த அந்த ரசிகர் தடுப்பையும் மீறி ஓடி சென்று டோனியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் கேட்டார். இதனை எதிர்பாராத டோனி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். பின்னர் சுதாரித்து கொண்டு அந்த நபரை ஆரத் தழுவிக் கொண்டார். பின்னர் அந்த ரசிகரிடம் இதுபோல் காலில் விழக்கூடாது என்று கண்டித்தார். கடந்த 3-ந் தேதி கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தின் போதும் ரசிகர் ஒருவர் இதுபோல் டோனியின் காலில் விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்