கிரிக்கெட்
‘எங்களது பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை’ கேப்டன் ரஹானே பேட்டி

‘பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எங்களது பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ஆடவில்லை’ என்று ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே தெரிவித்தார்.
இந்தூர்,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 51 ரன்னும், சஞ்சு சாம்சன் 28 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் முஜீப் ரகுமான் 3 விக்கெட்டும், ஆன்ட்ரூ டை 2 விக்கெட்டும், ஆர்.அஸ்வின், அங்கித் ராஜ்பூத், அக்‌ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது. கெய்ல் (8 ரன்), மயங்க் அகர்வால் (2 ரன்), கருண்நாயர் (31 ரன்), அக்‌ஷர் பட்டேல் (4 ரன்) அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தாலும், தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (84 ரன்கள், 54 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன்) அதிரடியாக ஆடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற மார்கஸ் ஸ்டோனிஸ் 16 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், அனுரீத் சிங் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். பஞ்சாப் அணி வீரர் முஜீப் ரகுமான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் அளித்த பேட்டியில், ‘கடந்த 2 வாரங்களாக நாங்கள் வெற்றி புள்ளிகள் எதுவும் பெறாததால் பதற்றமாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முன்னேற்றம் கண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி எங்களது பேட்டிங்கை சோதிக்கும் வகையில் அமைந்தது. எங்கள் அணியில் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமானதாகும். எங்கள் அணி இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு பந்து வீச்சாளர்கள் தான் முக்கிய காரணமாக விளங்கினார்கள். எங்களுடைய அணியில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அனுபவம் இல்லாதவர்கள். போட்டி போகப்போக அவர்கள் நன்றாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். கேப்டனாக அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்து ஆட்டத்தின் தன்மைக்கு தகுந்தபடி அணியை வழிநடத்துகிறேன். பந்து வீச்சாளர்களை மாற்றி, மாற்றி சரியான கூட்டணியை அமைப்பது, நேர்த்தியான பேட்டிங் வரிசையை களம் இறக்க திட்டமிடுவது ஆகியவற்றில் கேப்டன் என்ற முறையில் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இந்த ஆடுகளத்தில் 170 முதல் 175 ரன்கள் எடுத்தால் மிகவும் நல்ல ஸ்கோராகும். நான் உள்பட பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் ஆட்டம் அமையவில்லை. ஐ.பி.எல். போட்டியில் பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசி வருகிறார்கள். எல்லா நேரமும் நாங்கள் தோல்விக்கு சாக்கு போக்கு சொல்ல முடியாது.

பேட்ஸ்மேனாக நாங்கள் சில ஷாட்களை தேர்வு செய்வதில் குழப்பம் அடைந்தோம். லோகேஷ் ராகுல் அடித்த பந்தை சஞ்சு சாம்சன் அருமையாக பிடித்தார். ஆனால் அந்த கேட்ச்சில் நடுவர்களின் எண்ணம் வேறுவிதமாக இருந்தது. நாங்கள் இன்னும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறோம். இனிவரும் ஆட்டங்கள் ஐந்திலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும்’ என்றார்.