ஐதராபாத் அணியிடம் தோற்றது பெங்களூரு: ‘எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை’ கேப்டன் விராட்கோலி பேட்டி

‘ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டங்களில் நாங்கள் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை’ என்று பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

Update: 2018-05-08 21:00 GMT

ஐதராபாத்,

‘ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டங்களில் நாங்கள் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை’ என்று பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

பெங்களூரு அணி தோல்வி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 39–வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி தனது அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 146 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் கனே வில்லியம்சன் 56 ரன்னும் (39 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன்), ‌ஷகிப் அல்–ஹசன் 35 ரன்னும் (32 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பெங்களூரு அணி தரப்பில் டிம் சவுதி, முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி, ஐதராபாத் வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து தோல்வி கண்டு அடுத்த சுற்று வாய்ப்பில் ஊசலாட்டம் கண்டுள்ளது. அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 39 ரன்னும் (30 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கிரான்ட்ஹோம் 33 ரன்னும் (29 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சருடன்) எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். ஐதராபாத் அணி தரப்பில் ‌ஷகிப் அல்–ஹசன் 2 விக்கெட்டும், சந்தீப் ‌ஷர்மா, புவனேஷ்வர்குமார், சித்தார்த் கவுல், ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஐதராபாத் அணி கேப்டன் கனே வில்லியம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு

வெற்றிக்கு பிறகு ஐதராபாத் அணி கேப்டன் கனே வில்லியம்சன் அளித்த பேட்டியில், ‘நாங்கள் சில கடினமான ஆடுகளங்களில் விளையாடி வருகிறோம். 150 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். ஆனால் அது நடக்கவில்லை. எங்களது பீல்டிங் சற்று மோசமாக இருந்தது. பீல்டிங்கில் மேலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். அதேநேரத்தில் சில அனுபவம் வாய்ந்த வீரர்கள் சரியான தருணத்தில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த வெற்றி கிடைத்தது. கடைசி ஓவரை புவனேஷ்வர்குமார் வீசிய விதம் அருமையானது. புவனேஷ்வர்குமாரும், சித்தார்த் கவுலும் பந்து வீச்சில் நீண்ட நாட்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களது ஸ்லோ மற்றும் யார்க்கர் வகை பந்து வீச்சுக்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை திணற வைக்கின்றன. இந்த வெற்றிக்கு கடின உழைப்பு முக்கிய காரணமாகும். எங்களுக்கு ஒரு சிறிய பார்ட்னர்ஷிப் அமைந்ததால் சவாலான ஸ்கோரை எட்ட முடிந்தது. ஒரு அணியாக எங்களது பவுலிங் அபாரமாக உள்ளது. முக்கிய தருணங்களில் வீரர்கள் பதற்றமின்றி செயல்படுவது நல்ல வி‌ஷயமாகும். பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இன்னும் நாங்கள் சில முன்னேற்றம் காண வேண்டும்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘இது கடினமான தோல்வியாகும். ஆட்டத்தின் போக்கை பார்க்கையில் இந்த தோல்வி எங்களுக்கு கிடைக்க தான் செய்யும். முதல் 7 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து விட்டு இவ்வாறு தோற்பது நல்லது அல்ல. நாங்கள் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் ஆடிய மோசமான ஷாட் மூலம் எதிரணியின் கையில் ஆட்டத்தை கொடுத்து விட்டோம். எங்களது பீல்டிங் நன்றாக இருந்தது. எதிரணி 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுக்கும் வகையில் நாங்கள் செயல்பட்டு இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். பந்து வீச்சில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். அணியில் வலுவான வீரர்கள் சிலர் இருந்தால் இதுபோன்ற போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும். ஐதராபாத் அணியில் அதுபோன்ற வீரர்கள் சிலர் உள்ளனர். ஐதராபாத் அணி தங்களது வலிமையை உணர்ந்து கட்டுப்பாட்டுடன் செயல்படுவதால் அவர்கள் வெற்றிகரமான அணியாக விளங்குகிறார்கள். ஆல்–ரவுண்ட் திறமையில் சென்னை, பஞ்சாப் அணிகள் சிறப்பாக உள்ளன. பந்து வீச்சில் ஐதராபாத் வலுவான அணியாக உள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்