கிரிக்கெட்
ஐபிஎல்: கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 41-வது லீக் ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. #Ipl
கொல்கத்தா, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  நடைபெற்று வரும் 41–வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

 இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் (36 ரன்கள்), எவின் லெவிஸ் (18 ரன்கள்) ரோகித் சர்மா (36 ரன்கள்) என கணிசமான பங்களிப்போடு பெவிலியன் திரும்பினர். 

கொல்கத்தா அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த இஷான் கிஷான் 21 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் உட்பட 62 ரன்கள் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இவருக்கு பிறகு வந்த வீரர்களான ஹர்திக் பாண்ட்யா (19 ரன்கள்), பென் கட்டிங் (24 ரன்கள்) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்துள்ளது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக  பியூஸ் சாவ்லா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியினர் களமிறங்கினர். தொடக்கம் முதலே மும்பை அணியினரின் ஆக்ரோஷமான பந்து வீச்சு மற்றும் திறமையான பீல்டிங்கால் ரன்களை குவிக்க திணறிய கொல்கத்தா அணியினர், தனது விக்கெட்டுகளையும் பறி கொடுத்தனர். சுனில் நரேன் (4 ரன்கள்), கிறிஸ் லின் (21 ரன்கள்), ராபின் உத்தப்பா (14 ரன்கள்), ஆந்த்ரே ரசூல் (2 ரன்கள்) என களமிறங்கிய அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் மைதானத்திலிருந்த கொல்கத்தா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 

இந்நிலையில் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் வெறும் 5 ரன்களில் வெளியேற கொல்கத்தா அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. அதன்படி மும்பை அணியின் திறமையான பந்து வீச்சால் 18.1-வது ஓவர்களில் கொல்கத்தா அணி 108 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. 

மும்பை அணியில் அதிகபட்சமாக கர்னல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, மிக்கெல்நாகன், மயங்க் மார்கெண்டே, பென் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 42-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.