பஞ்சாப்பை வீழ்த்தி பதிலடி கொடுத்தது ராஜஸ்தான்: ‘சிறப்பான பந்து வீச்சே வெற்றிக்கு காரணம்’ கேப்டன் ரஹானே பாராட்டு

‘பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எங்கள் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சே வெற்றிக்கு காரணம்’ என்று ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே பாராட்டினார்.

Update: 2018-05-09 22:00 GMT

ஜெய்ப்பூர், 

‘பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எங்கள் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சே வெற்றிக்கு காரணம்’ என்று ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே பாராட்டினார்.

பதிலடி கொடுத்த ராஜஸ்தான்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 40–வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 82 ரன்னும் (58 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), சஞ்சு சாம்சன் 22 ரன்னும் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ஆன்ட்ரூ டை 4 விக்கெட்டும், முஜீப் ரகுமான் 2 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (95 ரன்கள், 70 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன்) கடைசி வரை ஆட்டம் இழக்காமல் வெற்றிக்காக போராடினார். அவருடன் இணைந்த வீரர்கள் யாரும் நிலைத்து நிற்காததால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் கிருஷ்ணப்பா கவுதம் 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனட்கட், பென் ஸ்டோக்ஸ், சோதி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

சிறப்பான பந்து வீச்சு

வெற்றிக்கு பிறகு ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில், ‘நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆடுகளத்தில் 160 ரன்கள் நல்ல ஸ்கோர் என நான் எண்ணினேன். ஆடுகளத்தில் ரன் எடுப்பது கடினமாக இருந்தது. நல்ல தொடக்கம் கொடுத்த ஜோஸ் பட்லருக்கு நன்றி. இந்த வெற்றிக்கு எங்களது சிறப்பான பந்து வீச்சே காரணம். குறிப்பாக பவர்பிளேயில் எங்கள் பந்து வீச்சு அருமையாக இருந்தது. மிடில் ஓவர்களில் சோதி சிறப்பாக பந்து வீசினார். கிருஷ்ணப்பா கவுதம் நன்றாக பந்து வீசி கெய்ல், அஸ்வின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த உத்வேகத்தை நாங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். இதுபோன்ற ஆடுகளத்தில் ஒரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அணியில் இருப்பது நல்லது. ஜெய்தேவ் உனட்கட் சில நேரங்களில் ரன்கள் அதிகம் விட்டுக்கொடுத்தாலும் விக்கெட் எடுப்பார். ஜெய்தேவ் உனட்கட் எப்பொழுதும் விக்கெட் வீழ்த்த நினைப்பவர். ‘டாஸ்’ ஜெயித்ததும் எதை? தேர்வு செய்வது என்பதில் குழப்பம் அடைந்தேன். இந்த வாழ்வா–சாவா? ஆட்டத்தில் நல்ல ஸ்கோரை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 40 ஓவர்களும் நாங்கள் நன்றாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் கருத்து தெரிவிக்கையில், ‘எதிரணிக்கு கூடுதலாக 10 ரன்கள் கொடுத்து விட்டதாக நான் நினைக்கிறேன். தொடக்கத்தில் அதிக விக்கெட்டுகளை இழந்ததால் வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்க முடியவில்லை. முந்தைய ஆட்டத்தில் செயல்பட்டதை போல் இந்த ஆட்டத்திலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். ஆடுகளம் அடித்து ஆட கடினமாக இருந்தது. பவர்பிளேயில் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்து முன்னேறி செல்ல வேண்டும் என்று நினைத்தோம். நான் முன்வரிசையில் களம் இறங்கியது ஒரு பரிசோதனை முயற்சியாகும். எங்கள் அணியில் உள்ள சிறந்த கூட்டணியை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். தற்போது உள்ள நிலையை நினைத்து நான் கவலைப்படவில்லை. நாங்கள் 10 ஆட்டங்களில் 6–ல் வெற்றி பெற்று இருக்கிறோம்’ என்றார்.

மேலும் செய்திகள்