ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி–ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Update: 2018-05-09 22:00 GMT

புதுடெல்லி, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி–ஐதராபாத் மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 42–வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை மீண்டும் சந்திக்கிறது.

டெல்லி அணி 10 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் டெல்லி அணி புதுப்பொலிவு பெற்றது. ஆனால் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் கடைசி கட்ட பந்து வீச்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்ததும், பீல்டிங்கில் கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டதும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த தவறுகளை சரி செய்ய வேண்டிய நிலையில் டெல்லி அணி உள்ளது.

பிரித்வி ஷா

டெல்லி அணியின் பேட்டிங்கில் பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், விஜய் சங்கர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மேக்ஸ்வேல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக காலின் முன்ரோ களம் இறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், அமித் மிஸ்ரா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

ஐதராபாத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஐதராபாத் அணியில் கேப்டன் கனே வில்லியம்சன், ஷிகர் தவான், அலெக்ஸ் ஹாலெஸ், யூசுப் பதான் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

பந்து வீச்சு பலம்

ஐதராபாத் அணியின் பந்து வீச்சு வலுவானதாக உள்ளது. எதிரணியை குறைந்த ஸ்கோருக்குள் சுருட்டும் வல்லமையுடன் ஐதராபாத் அணியில் பவுலர்கள் விளங்குகிறார்கள். சித்தார்த் கவுல், ரஷித் கான், புவனேஷ்வர்குமார் ஆகியோரின் பந்து வீச்சு அபாரமாக உள்ளது.

ஐதராபாத் அணி தனது வெற்றிப் பயணத்தை நீட்டிக்க முனைப்பு காட்டும். அதே நேரத்தில் முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க டெல்லி அணி தீவிரம் காட்டும். அத்துடன் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால் டெல்லி அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முழுமையாக பறிபோய்விடும் என்பதால் வெற்றிக்காக கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ஐதராபாத் அணி 7 முறையும், டெல்லி அணி 4 தடவையும் வெற்றி கண்டுள்ளன.

மேலும் செய்திகள்