கிரிக்கெட்
2020–ம் ஆண்டு ‘20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை விளையாட இலக்கு’ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் சொல்கிறார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டரான சோயிப் மாலிக் 2015–ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
கயானா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டரான சோயிப் மாலிக் 2015–ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது சோயிப் மாலிக் வெஸ்ட்இண்டீசில் வருகிற ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் கரிபியன் பிரிமியர் லீக் 20 ஓவர் போட்டியில் கயானா அமாசோன் வாரியர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் 36 வயதான சோயிப் மாலிக் அளித்த ஒரு பேட்டியில், ‘2019–ம் ஆண்டு ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எனது கடைசி உலக கோப்பை போட்டியாகும். ஆனால் 2020–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புகிறேன். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அது தான் எனது இலக்காகும். இந்த இரண்டும் பெரிய இலக்காகும். அதனை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். இது எப்படி போகும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் இந்த இரண்டு உலக கோப்பை போட்டியிலும் விளையாட நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.