பஞ்சாப் அணி தொடர் தோல்வி ; ஆலோசகர் சேவாக்கிடம் கோபத்தை கொட்டிய நடிகை பிரித்தி ஜிந்தா?

தொடர் தோல்வியால் ஆலோசகர் சேவாக்கிடம் கோபத்தை கொட்டினார் பஞ்சாப் அணி உரிமையாளர் நடிகை பிரித்தி ஜிந்தா

Update: 2018-05-11 09:54 GMT
இந்துார்

பஞ்சாப் அணி பங்குதாரர்  நடிகை  பிரித்தி ஜிந்தா, ஆலோகர் சேவாக் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், இந்த சீசனுடன் பஞ்சாப் அணியை விட்டு சேவாக் விலகுவார் எனத் தெரிகிறது.  

இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் சேவாக், 39. ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணியின்  ஆலோசகராக உள்ளார். இந்த ஆண்டு, அஸ்வினை கேப்டனாக தேர்வு செய்தது, ஏலத்தில் கெய்லை வாங்கிய போன்ற முக்கிய முடிவுகளை இவர் தான் எடுத்தார். 

இதனிடையே, 11வது சீசன் ஐ.பி.எல்., தொடரை சிறப்பாக தொடங்கிய  பஞ்சாப் அணி (12 புள்ளி), இதுவரை 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி அடைந்தது. கடந்த போட்டியில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ராஜஸ்தானை சந்தித்தது பஞ்சாப். இப்போட்டியில், கருண் நாயர், மனோஜ் திவாரி உள்ளிட்ட பேட்ஸ் மேன்களுக்கு முன்னதாக, கேப்டன் அஸ்வின், 3வது வீரராக களமிறங்கி, ‘டக்’ அவுட்டானார்.  கடைசியில் பஞ்சாப் அணி தோற்றது.

இந்த நிலையில் மும்பை மிர்ரர் வெளியிட்டு உள்ள செய்தியில் சேவாக்குக்கும் பிரித்தி ஜிந்தாவுக்கும் மோதல் நடந்ததாக கூறி உள்ளது அது வெளியிட்டு உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

கடைசியாக களமிறங்கிய 5 போட்டிகளில் பஞ்சாப் 3 போட்டிகளில்  தோற்றது, இது அணி உரிமையாளர்,  பிரித்தி ஜிந்தாவுக்கு கோபத்தை கொடுத்தது.  இதனால்   பஞ்சாப் அணி வீரர்கள் அறைக்கு சென்றார்.   அங்கிருந்த ஆலோசகர் சேவாக்கிடம், ‘அஸ்வினை ஏன் முன்னதாக களமிறக்கினீர்கள்’ என, கேட்டதாக கூறப்படுகிறது. 

சூழ்நிலையை புரிந்து கொண்ட சேவாக், அமைதி காத்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து கோபமாக பேசிய அவர்,‘ வெற்றி பெறும் அணியில் தொடர்ந்து தேவையில்லாமல், மாற்றங்கள் செய்வதால் தான் தோற்க நேரிடுகிறது,’ என, சேவாக் மீது குற்றம் சுமத்தினார். 

பிரித்தியின் இந்த செயல் குறித்து, மற்றொரு உரிமையாளரிடம் பேசிய சேவாக்,‘ கிரிக்கெட் நடவடிக்கையில் அவர், தலையிட வேண்டாம், விலகி இருக்கச் சொல்லுங்கள்,’ என, கூறியதாக தெரிகிறது.

இது தவிர, தொடர் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், இவ்விஷயத்தை பெரிது படுத்தினால், வீரர்கள் கவனம் சிதறிவிடும் என்பதால், சேவாக், தொடர்ந்து அமைதியாக உள்ளாராம்.  இந்த சீசனுடன், பஞ்சாப் அணியுடனான, தனது 5 ஆண்டுகால ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளவும் சேவாக் முடிவு செய்துள்ளதாக  கூறப்படுகிறது. 

மற்றொரு உரிமையாளர் மோகித் பர்மன் கூறுகையில்,‘‘ என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு பிரச்சினையே அல்ல. இதுகுறித்து சேவாக், பிரித்தி ஜிந்தாவிடம் பேசவுள்ளேன்,’’ என்றார்.  

மேலும் செய்திகள்