கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் சென்னை–ஐதராபாத், மும்பை–ராஜஸ்தான் அணிகள் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்களில் சென்னை–ஐதராபாத் (மாலை 4 மணி), மும்பை–ராஜஸ்தான் (இரவு 8 மணி) அணிகள் கோதாவில் இறங்குகின்றன.
புனே, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்களில் சென்னை–ஐதராபாத் (மாலை 4 மணி), மும்பை–ராஜஸ்தான் (இரவு 8 மணி) அணிகள் கோதாவில் இறங்குகின்றன.ஐ.பி.எல். கிரிக்கெட் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 4 மணிக்கு புனேயில் நடக்கும் 46–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ள டோனி தலைமையிலான சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ‘பிளே–ஆப்’ சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்து விடலாம். ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சென்னை அணியின் பந்து வீச்சு, பீல்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக டேவிட் வில்லி 4 ஓவர்களில் 47 ரன்களை வாரி வழங்கியதை கண்டு கேப்டன் டோனி ‘டென்‌ஷன்’ ஆகிப்போனார். இதனால் இந்த ஆட்டத்தில் அவர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. அம்பத்தி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, டோனி உள்ளிட்டோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், பந்து வீச்சு தான் சென்னை அணிக்கு கவலைக்குரிய அம்சமாக உள்ளது. இதே போல் பீல்டிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இந்த ஆட்டத்திலும் தோல்வியை தழுவினால் அதன் பிறகு நெருக்கடி அதிகமாகும் என்பதை உணர்ந்துள்ள சென்னை வீரர்கள் களத்தில் முழு மூச்சுடன் வரிந்து கட்டி நிற்பார்கள் என்று நம்பலாம்.ஐதராபாத் எப்படி? கனே வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 9 வெற்றி, 2 தோல்வி என்று 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கும் முன்னேறி விட்டது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் அந்த அணி சரிசம பலத்துடன் விளங்குகிறது. பேட்டிங்கில் வில்லியம்சன் (493 ரன்), ஷிகர் தவான் (290 ரன்), யூசுப் பதான் (186 ரன்), மனிஷ் பாண்டே (184 ரன்), பக்கபலமாக இருக்கிறார்கள். பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ரஷித்கான், சித்தார்த் கவுல், ‌ஷகிப் அல்–ஹசன் நம்பிக்கை அளிக்கிறார்கள்.தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள ஐதராபாத் அணி அந்த பயணத்தை நீட்டிப்பதில் ஆர்வமாக இருக்கிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கும் பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.மற்றொரு ஆட்டம் இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் தலா 10 புள்ளிகள் (5 வெற்றி, 6 தோல்வி) பெற்று இருக்கிறது. இரு அணிகளுமே தங்களது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதனால் இந்த ஆட்டத்தில் தோல்வி காணும் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி போய் விடும்.ராஜஸ்தான் அணியில் கடந்த ஆட்டத்தில் வார்னேவின் ஆலோசனையின் பேரில் பென் ஸ்டோக்ஸ் தொடக்க ஆட்டக்காரராக இறக்கப்பட்டார். அந்த பரிசோதனை முயற்சி இந்த ஆட்டத்திலும் தொடரலாம். தொடர்ச்சியாக 4 அரைசதங்களை நொறுக்கியுள்ள விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரைத் தான் (11 ஆட்டத்தில் 415 ரன்) இப்போது ராஜஸ்தான் அணி மலை போல் நம்பி உள்ளது.அதே சமயம் தொடர்ச்சியாக 3 வெற்றி பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, அந்த ஆதிக்கத்தை நீட்டிப்பதில் கவனம் செலுத்தும். இவ்விரு அணிளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.இரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.