கிரிக்கெட்
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. #CSKvSRH

புனே,

முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் புனேயில் நடக்கும் 46–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ள டோனி தலைமையிலான சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ‘பிளே–ஆப்’ சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்து விடலாம். ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சென்னை அணியின் பந்து வீச்சு, பீல்டிங் மோசமாக இருந்தது. இந்த ஆட்டத்திலும் தோல்வியை தழுவினால் அதன் பிறகு நெருக்கடி அதிகமாகும் என்பதை உணர்ந்துள்ள சென்னை வீரர்கள் களத்தில் முழு மூச்சுடன் வரிந்து கட்டி நிற்பார்கள் என்று நம்பலாம்.

கனே வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 9 வெற்றி, 2 தோல்வி என்று 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கும் முன்னேறி விட்டது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் அந்த அணி சரிசம பலத்துடன் விளங்குகிறது. தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள ஐதராபாத் அணி அந்த பயணத்தை நீட்டிப்பதில் ஆர்வமாக இருக்கிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கும் பதிலடி கொடுக்க முயற்சிக்கும் என்ற நிலையில் ஆட்டம் தொடங்கி உள்ளது.

போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடுகிறது.