கிரிக்கெட்
பெங்களூரு அணியின் அபார பந்து வீச்சினால் 88 ரன்களில் சுருண்டது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 48-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியின் அபார பந்து வீச்சில் 88 ரன்களில் சுருண்டது பஞ்சாப் அணி. #IPL
இந்தூர்,

ஐபிஎல் போட்டியின் 48-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் இந்தூரில் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். அதன் படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெய்லும் களமிறங்கினர்.

தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ராகுல் 3 சிக்ஸர்கள் விளாச அணியின் ஸ்கோர் 36-ஆக இருக்கும் போது உமேஷ் பந்து வீச்சில் கேட்ச் ஆன ராகுல் 21 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் கெய்ல் 18 ரன்களில் உமேஷ் யாதவ்வின் ஆக்ரோஷமான பந்து வீச்சில் வெளியேற அடுத்ததாக ஆரோன் பிஞ்ச் களமிறங்கினார்.

இதனிடையே கருண் நாயர் 1 ரன்னில் வெளியேற, அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் பெங்களூரு அணியினரின் சிறப்பான பந்து வீச்சு மற்றும் அபாரமான பீல்டிங்கால் ரன் சேர்க்க முடியாமல் திணறினர். ஆரோன் பிஞ்ச் (26 ரன்கள்) தவிர, களமிறங்கிய அனைத்து வீரர்களும் ஒற்றை ரன்களில் வெளியேற திக்குமுக்காடிய பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் வெறும் 88 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், சிராஜ், சகால், கிராந்தோமே மற்றும் மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை ரன் அவுட்டில் இழந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கி விளையாடி வருகிறது.