கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக ஷசாங் மனோகர் மீண்டும் தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக ஷசாங் மனோகர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தனிப்பட்ட சேர்மனாக ஷசாங் மனோகர் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாக்பூரை சேர்ந்த 60 வயது வக்கீலான ஷசாங் மனோகர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஆவார். 2016-ம் ஆண்டில் ஐ.சி.சி.யின். தனிப்பட்ட சேர்மன் பொறுப்பை ஏற்ற ஷசாங் மனோகர் தொடர்ந்து 2-வது முறையாக இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சேர்மன் பதவிக்கு போட்டியிடுபவரை, ஐ.சி.சி. இயக்குனர்கள் 2 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பரிந்துரை செய்ய வேண்டும். ஷசாங் மனோகர் தவிர வேறு யாருடைய பெயரும் சிபாரிசு செய்யப்படாததால் அவர் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார்.

ஷசாங் மனோகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஐ.சி.சி.யின் சேர்மனாக மறுபடியும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை கவுரவமாக கருதுகிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஐ.சி.சி. இயக்குனர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆட்டத்தை முன்னேற்ற ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொண்டோம். நான் பதவி ஏற்கும் போது ஆட்டத்துக்கு அளித்த உறுதிமொழிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் எங்களது உறுப்பினர்களுடன் இணைந்து சர்வதேச அளவில் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்த திட்டமிட்டு செயல்படுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.