பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாதது தோல்விக்கு காரணம் - ராஜஸ்தான் கேப்டன் ரஹானே

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாதது தோல்விக்கு காரணம் என ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கூறினார்.

Update: 2018-05-16 23:00 GMT
கொல்கத்தா,

‘கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாதது தோல்விக்கு காரணம்’ என்று ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. இதில் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 143 ரன்கள் இலக்கை கொல்கத்தா அணி 18 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7-வது வெற்றியை தனதாக்கியது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 45 ரன்னும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 41 ரன்னும் எடுத்தனர்.

தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே அளித்த பேட்டி வருமாறு:-

எங்களது தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர் (39 ரன்), ராகுல் திரிபாதி (27 ரன்) ஆகியோரின் பேட்டிங் நன்றாக இருந்தது. நான் களம் இறங்கியதும் அந்த உத்வேகத்தை முன்னெடுத்து செல்ல முயற்சித்தேன். ஆனால் அதன் பிறகு எங்களுக்கு எந்த பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை. இதுபோன்ற நல்ல தொடக்கம் கிடைக்கும் போது மிடில் வரிசையில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைய வேண்டியது அவசியமாகும். ஆனால் அந்த மாதிரி பார்ட்னர்ஷிப் எங்களுக்கு கிடைக்காதது பின்னடைவை ஏற்படுத்தியது.

ஜோஸ்பட்லரே எல்லா நேரமும் ரன் குவித்து கொண்டு இருக்க முடியாது. மற்ற பேட்ஸ்மேன்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததே இந்த தோல்விக்கு காரணமாகும். இந்த ஆடுகளத்தில் 175 முதல் 180 ரன்கள் எடுத்து இருந்தால் சவாலான ஸ்கோராக இருந்து இருக்கும். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

இன்னும் எங்களுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு இருப்பதாக நம்புகிறோம். கிரிக்கெட்டை பொறுத்தவரையில் எதுவும் நடக்கலாம். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று முன்னேற்றம் அடைய வேண்டும். எங்களது அடுத்த ஆட்டம் சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் நடக்கிறது. அந்த ஆடுகளம் பற்றி நன்கு அறிவோம். எங்களது அணியின் முக்கிய வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தங்களது சொந்த நாட்டு அணிக்கு (இங்கிலாந்து) திரும்புவதால் அடுத்த ஆட்டத்தில் அவர்களை நாங்கள் தவற விடுகிறோம். அதேநேரத்தில் ஜோஸ் பட்லர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு தேர்வு பெற்று இருப்பது ஒரு வீரராக எனக்கு மகிழ்ச்சி தான். அவர்களது இடத்தை நிரப்பக்கூடிய அளவுக்கு எங்களிடம் வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு ரஹானே கூறினார்.

4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கருத்து தெரிவிக்கையில், ‘ஷேன் வார்னேவின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் தான் எனக்கு முன் மாதிரி. அவரது முன்னிலையில் (ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக வார்னே உள்ளார்) விளையாடும் போது, எப்பொழுதும் எனக்கு வித்தியாசமான உத்வேகம் ஏற்படும். அவர் முன்னிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். அதனை செய்து காட்டி இருக்கிறேன். ஆட்டம் முடிந்ததும் அவரிடம் நான் பேசினேன். அடுத்து வரும் இங்கிலாந்து தொடருக்காக நான் சில திட்டங்களை வைத்து இருக்கிறேன். அது குறித்து அவரிடம் நான் விவாதித்தேன். அவரும் எனக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்