பும்ரா பந்து வீச்சு அருமையாக இருந்தது

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி, பும்ரா பந்து வீச்சு அருமையாக இருந்தது மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு.

Update: 2018-05-17 22:30 GMT
மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த முக்கியமான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இதில் மும்பை அணி நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்து மயிரிழையில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 94 ரன்கள் எடுத்தார்.

கடைசிகட்டத்தில் வியப்புக்குரிய வகையில் பந்து வீசிய மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

2-வது பேட்டிங் (சேசிங்) செய்கையில் பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் இந்த சீசனில் இதுவரை 482 ரன்கள் குவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் 2-வது பேட்டிங் செய்த பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் இந்த வகையில் டேவிட் வார்னர் 468 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘முக்கியமான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியின் தேவைக்கு தகுந்தபடி வீரர்கள் செயல்பட்டார்கள். இந்த ஆடுகளத்தின் தன்மையை வைத்து, இது அதிக ரன் குவிக்கும் ஆட்டமாக இருக்கும் என்பதை அறிந்து இருந்தோம். மிடில் ஓவர்களில் எங்களது ஆட்டம் சரியாக அமையவில்லை. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் அதிகமாக எடுத்து இருக்க வேண்டும். எதிரணியின் வலுவான பேட்டிங் வரிசையை இந்த ஸ்கோரை வைத்து சமாளிப்பது கடினமானது என்பது எங்களுக்கு தெரியும். எங்களது பந்து வீச்சு பாராட்டும் வகையில் இருந்தது. பும்ரா கடந்த 2 வருடங்களாக கடினமாக உழைத்து வருகிறார். அவர் தனது அருமையான பந்து வீச்சின் மூலம் எதிரணியினருக்கு சவாலாக விளங்கியதுடன், ஆட்டம் எங்களுக்கு சாதகமாக முடியவும் வழிவகுத்தார்’ என்றார்.

பஞ்சாப்-மும்பை ஆட்டம் முடிந்ததும் மும்பை அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும், பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலும் தாங்கள் அணிந்து இருந்த அணியின் பனியனை (டி-சர்ட்) பரஸ்பரம் மாற்றி அணிந்து கொண்டனர். கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணியின் வீரர்களும், தோல்வி கண்ட அணியின் வீரர்களும் ஆட்டம் முடிந்ததும் பனியனை மாற்றிக்கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் இருவரும் பனியனை மாற்றி கொண்ட இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது.

இது குறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘நாம் கால்பந்து போட்டியில் அதிகம் இதனை பார்த்து இருப்போம். இந்த கலாசாரத்தை நானும், ஹர்திக்கும் கிரிக்கெட்டுக்கு கொண்டு வர எண்ணினோம். இதனை நாங்கள் முன்கூட்டியே முடிவு செய்யவில்லை. ஆட்டம் முடிந்த பிறகு ஏதேச்சையாக தான் இந்த எண்ணம் எங்களுக்கு உதித்தது. இது ஒரு நல்ல விஷயம்’ என்றார்.

மேலும் செய்திகள்