கிரிக்கெட்
‘டாஸ்’ போடும் முறையை நீக்க ஐ.சி.சி. பரிசீலனை

கிரிக்கெட்டில் எந்த அணி முதலில் பேட் செய்வது, யார் முதலில் பந்து வீசுவது என்பது ‘டாஸ்’ மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
புதுடெல்லி,

1877-ம் ஆண்டு முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் (இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதல்) நடந்தது. அது முதல் இந்த நாள் வரை ‘டாஸ்’ நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அதாவது நாணயத்தை உள்நாட்டு அணி கேப்டன் மேலே சுண்டி விட்டு பூவா, தலையா? எது வேண்டும் என்று எதிரணி கேப்டனிடம் கேட்பார். அவற்றில் ஒன்றை எதிரணி கேப்டன் சொல்வார். பிறகு எந்த அணி கேப்டனுக்கு ‘டாஸ்’ கைகொடுக்கிறதோ அவரே முதலில் பேட்டிங்கா அல்லது பவுலிங்கா என்பதை முடிவு செய்வார்.

இந்த நிலையில் 141 ஆண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ‘டாஸ்’ நடைமுறையை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒழிப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இப்போது பரிசீலிக்க தொடங்கி உள்ளது. பொதுவாக ஒரு அணி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது என்றால் அங்குள்ள ஆடுகளங்கள் உள்ளூர் அணிக்கு ஏற்றவாறு கிரிக்கெட் வாரியம் அமைக்கிறது. அதுவும் டாஸில் வெளிநாட்டு அணி தோற்று விட்டால் உள்ளூர் அணியின் ஆதிக்கம் தாறுமாறாக ஓங்கி விடுவது உண்டு. டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை பயணம் செல்லும் அணிகள் வெகுவாக திணறுவதுடன் ஒருதலைபட்சமான முடிவுகளே அதிகம் கிடைப்பதாக ஐ.சி.சி. கருதுகிறது.

எனவே ‘டாஸ்’ முறையை நீக்கிவிட்டு வெளிநாட்டு அணியின் கேப்டனே ஒவ்வொரு போட்டியிலும் முதலில் பேட் செய்வதா அல்லது பந்து வீசுவதா என்பதை முடிவு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய ஐ.சி.சி. பரிசீலித்து வருகிறது. இது குறித்து வருகிற 28 மற்றும் 29-ந்தேதி மும்பையில் நடக்கும் ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இதன் ஒரு அங்கமாக கணக்கில் கொள்ளப்பட இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் இங்கிலாந்து பயணத்தில் (ஆஷஸ் தொடர்) இருந்து இதை பரிசோதனை செய்ய ஐ.சி.சி. திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற ‘டாஸ்’ முறையை அகற்ற வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமான் தான். இது மாதிரி செய்யும் போது, டாஸ் மூலம் கிடைக்கும் அனுகூலம் உள்நாட்டு அணிக்கு முற்றிலும் கிடைக்காது. இதனால் அவர்கள் ஓரளவு நல்ல ஆடுகளத்தை அமைப்பார்கள். அதனால் இரு அணிக்குமே வெற்றி வாய்ப்பு சரிசமமாக உருவாகும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.