பஞ்சாப்பின் கனவை தகர்க்கும் முனைப்பில் சென்னை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

Update: 2018-05-19 23:30 GMT

நடப்பு ஐ.பி.எல். திருவிழாவின் இறுதி லீக் ஆட்டம் இது தான். சென்னை அணியை பொறுத்தவரை 8 வெற்றிகளுடன் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை ஏற்கனவே எட்டிவிட்டது. ஆனால் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை உறுதி செய்வதற்கு இந்த வெற்றி முக்கியமானதாகும். அது மட்டுமின்றி சென்னை அணியினர் தங்களுக்கு அமோக ஆதரவு அளித்த உள்ளூர் (புனே) ரசிகர்களுக்கு வெற்றியுடன் விடை கொடக்க ஆர்வமாக இருக்கிறார்கள். புனே மைதானத்தில் சென்னை அணி 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 6 வெற்றி, 7 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 7-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இமாலய வெற்றி பெற்று, ரன்ரேட்டிலும் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே அந்த அணியின் ‘பிளே-ஆப்’ கனவு நனவாகும். அது மட்டுமின்றி பஞ்சாப்புக்கு வாய்ப்பு உருவாக மும்பை அணி டெல்லியிடம் தோல்வியடைய வேண்டும்.

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலின் (652 ரன்) பேட்டிங்கும், ஆண்ட்ரூ டைவின் பந்து வீச்சும் (24 விக்கெட்) மட்டும் சீராக இருக்கிறது. நட்சத்திர வீரர்கள் அடங்கிய பஞ்சாப் அணியில் ஒருங்கிணைந்த ஆட்டம் இல்லாததே ஊசலாட்டத்துக்கு காரணமாகும். ரன்ரேட்டை கணக்கில் கொள்ள ‘டாஸ்’ ஜெயித்தால் அந்த அணி 2-வது பேட் செய்வதையே விரும்பும்.

அதே சமயம் இவ்விரு அணிகளும் சந்தித்த முந்தைய லீக்கில் 4 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களை போட்டியை விட்டு வெளியேற்றும் முனைப்புடன் சென்னை அணி வியூகங்களை தீட்டி வருகிறது.

மேலும் செய்திகள்