கிரிக்கெட்
பெண்கள் அணிகள் மோதும் காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது.
மும்பை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. அதே மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெண்கள் அணிக்கான காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான ஐ.பி.எல். சூப்பர்நோவாஸ் அணியும், ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான ஐ.பி.எல். டிரையல்பிளாசர்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளின் வீராங்கனைகளும் இடம் பிடித்து இருக்கிறார்கள். இதில் ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங், ஆல்-ரவுண்டர் எலிசி பெர்ரி, இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் மிதாலி ராஜ் (மூன்று பேரும் சூப்பர் நோவாஸ் அணி), இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, நியூசிலாந்து தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டேனியலி ஹாஸல் (டிரையல் பிளாசர்ஸ்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

மந்தனா கூறுகையில், ‘வெளிநாட்டு வீராங்கனைகளுடன் இணைந்து நாங்கள் இந்திய மண்ணில் விளையாடும் முதல் போட்டி இது தான். வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆட்டத்தில் பங்கெடுக்க இருப்பதை நினைத்து ஒவ்வொரு வீராங்கனைகளும் பரவசத்தில் உள்ளோம். ரசிகர்கள் முன்னிலையில் திறமையை வெளிக்காட்ட ஆர்வமாக இருக்கிறோம்.’ என்றார்.

இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.