கிரிக்கெட்
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் மே 31 ந்தேதி வீரர்கள் ஏலம் ; 794 பேர் பதிவு

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் ஜூலை மாதம் 11-ந்தேதி தொடங்கும் என்றும், வீரர்கள் ஏலம் 31-ல் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளன
.

சென்னை

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரை அறிமுகப்படுத்தியது. இதை ஸ்டார் கிரிக்கெட் ஒளிப்பரப்பு செய்தது. தமிழ்நாடு வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த லீக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2016 மற்றும் 2017-ல் வெற்றிகரமாக லீக் நடைபெற்றது. 2016-ல் தூத்துக்குடி அணியும், 2017-ல் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியது.

இந்த இரண்டு வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்காததால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த தொடரை நடத்தியது என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் ஜூலை 11-ந்தேதி 3-வது சீசன் தொடங்கும் என தமிழ்நாடு பிரீமியர் லீக் அதிகாரி தெரிவித்ததாக ஆங்கில இணைய தளம் டைம்ஸ் ஆப் இந்தியா  செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் தமிழ்நாடு பிரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலம் மே 31-ந்தேதி, சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெறும் எனவும், 794 வீரர்கள் பதிவு செய்துள்ளதாகவும், தொடருக்கான முழு அட்டவணையை தயாரிப்பதற்காக போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்துடன் பேசிக் கொண்டிருப்பதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏலத்தில் பங்கேற்கும் அணிகள் தேசிய அணிக்காக விளையாடிய எந்தவொரு வீரர்களையும் (Capped Players) தக்கவைக்க முடியாது என்றும், முதல் இரண்டு சுற்றில் எந்தவொரு வீரரையும் ஏலம் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.