கிரிக்கெட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சகாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் சகாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். #DineshKarthik #IndiaAfghanistanTest
புதுடெல்லி,

வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் வரும் ஜூன் 14-ந் தேதி விளையாட இருக்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14 முதல் 18 வரை நடக்கிறது. 

இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2-ல் விளையாடியபோது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் வலது கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதனால் மருத்துவரின் பரிந்துரையின் படி சிகிச்சை பெற்று வரும் சகா, ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் சகா விற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

மேலும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தினேஷ் கார்த்திக்கே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தொடர்வார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.