ஐ.பி.எல். கிரிக்கெட்: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சல்மான்கான் சகோதரர் ஒப்புதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சல்மான்கான் சகோதரர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2018-06-02 23:15 GMT
தானே,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சல்மான்கானின் சகோதரரும், இந்தி நடிகருமான அர்பாஸ்கான் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை நடந்தது. இந்த போட்டியை மையமாக வைத்து மராட்டிய மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் சூதாட்டம் (பெட்டிங்) நடந்ததை அந்த மாநில போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக போலீசார் முக்கிய சூதாட்ட தரகர் சோனு ஜலான் உள்பட 4 பேரை மும்பையில் வைத்து கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ்கான் மற்றும் சிலரும் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அர்பாஸ்கானுக்கு தானே போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து இந்தி நடிகர் சல்மான்கானின் சகோதரரும், நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ்கான் நேற்று தானே போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் போலீசார் சூதாட்டம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார். அத்துடன் சூதாட்ட தரகர் சோனு ஜலானுடன், அர்பாஸ் கானை நேருக்கு, நேர் வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சூதாட்ட தரகர் சோனு ஜலானுக்கு, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அர்பாஸ் கானிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து தானே குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஐ.பி.எல். போட்டியில் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக சூதாட்டத்தில் (பெட்டிங்கில்) ஈடுபட்டதாக அர்பாஸ்கான் ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த ஆண்டு எந்த சூதாட்டத்திலும் ஈடுபடவில்லை என்று அவர் தெரிவித்தார். ஐ.பி.எல். சூதாட்டத்தில் தரகர் சோனு ஜலானிடம் ரூ.2.80 கோடி இழந்ததாகவும், ஆனால் அந்த தொகையை இன்னும் வழங்காததால் அவர் தன்னை மிரட்டி வருவதாகவும் கூறினார். போலீஸ் விசாரணைக்கு அர்பாஸ்கான் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இந்த விசாரணை தொடரும்’ என்று தெரிவித்தார்.

விசாரணை முடிந்து வெளியே வந்த அர்பாஸ்கான் கருத்து தெரிவிக்கையில், ‘போலீசார் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் உரிய பதில் அளித்தேன். போலீசாரின் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பேன்’ என்றார். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மற்றொரு இந்தி பட தயாரிப்பாளர் பராக் சாங்விக்கு தானே போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இதற்கிடையில் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு இருக்கும் சூதாட்ட தரகர் சோனு ஜலானின் போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று தானே போலீஸ் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று அவரது போலீஸ் காவலை வருகிற 6-ந் தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்