கிரிக்கெட்
ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளுக்கிடையேயான 20 ஓவர் போட்டி இந்தியாவில் தொடக்கம்

ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளுக்கிடையேயான 20 ஓவர் போட்டி இந்தியாவில் இன்று தொடங்குகிறது. #AfgVsBang
டேராடூன்,

ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட் போட்டிகளில் அடுத்த நிலைக்கு செல்லும் வகையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் வரும் ஜூன் 14-ந் தேதி விளையாட இருக்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14 முதல் 18 வரை நடக்கிறது. 

இதனிடையே ஆப்கானிஸ்தான் அணி, வங்காளதேச அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. ஜூன் 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் இப்போட்டிகள் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏற்றவாறு ஆப்கானிஸ்தான் நாட்டில் மைதானங்கள் அமையாததால், வங்கதேசத்திற்கு எதிரான தொடர் இந்தியாவின் டேராடூன் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போட்டிகளில் வங்கதேச அணிக்கு சகிப் அல் ஹசனும், ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கர் ஸ்டானிக்ஜாய் கேப்டனாக செயல்பட உள்ளனர்.