கிரிக்கெட்
முதல் 20 ஓவர் போட்டி: ஆப்கான் சுழலில் சிக்கி தோல்வி தழுவிய வங்காள தேசம்

இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டி விளையாடும் முன் வங்கதேசத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் விளையாடுகிறது. # T20
டேராடூன்

ஆப்கானிஸ்தான் வங்காள தேசம் மோதும் முதல் 20 ஓவர் போட்டி, டேராடூனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

168 ரன்கள் எடுத்தது வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 19 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்கார்   முகம்மது ஷேசாத், உஸ்மான் கனி ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். உஸ்மான் கனி 26 ரன்னில் ஆட்டமிழந்தார். 5 பவுண்டரிகள் அடித்த ஷேசாத் 40 ரன்களில் வெளியேறினார்.

அடுத்துக் களமிறங்கிய கேப்டன் அஸ்கர் ஸ்டைன்ஜாய் 25 ரன்களில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். நடுவரிசை வீரர்களான நஜ்முல்லா ஜத்ரன்(2), முகம்மது நபி(0) விரைவாக வெளியேறியதால், ஆப்கானிஸ்தான் அணி தடுமாறியது. ஆனால், 6-வது விக்கெட்டுக்கு ஷமிமுல்லா ஷென்வாரி (36), ஷபிகுல்லா(24) ஆகியோர் நிலைத்து நின்று ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தனர். ரஷித்கான் 6 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. வங்கதேசம் தரப்பில் அபுல் ஹசன், முகமதுல்லா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

168 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிம் இக்பால், சகிப் அல்ஹசன் களமிறங்கினார்கள். ஆனால், முஜிபுர் ரஹ்மான் வீசிய முதல் பந்தில் இக்பால் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதனால், முஜிபுர் ரஹ்மானுக்கு கோல்டன் விக்கெட்டாக அமைந்தது. அடுத்து வந்த லிட்டன் தாஸ், சகிப் அல் ஹசனுடன் இணைந்தார். அனுபவ வீரர் சகிப் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

முகமது நபி வீசிய 5-வது ஓவரில் சகிப் அல் ஹசன் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து முஸ்பிகுர் ரஹ்மான், களமிறங்கி லிட்டன் தாஸுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார். ஆனால், லிட்டன் தாஸ் சில சிக்கர்களையும், பவுண்டிரிகளையும் அடித்து அணியின் ரன்வேகத்தை கூட்டினார். ஆனால் நீண்டநேரம் நிலைக்காத லிட்டன் தாஸ் 30 ரன்கள் சேர்த்த நிலையில் முகம்மது நபி சுழலில் வெளியேறினார்.

அதன்பின் வங்கதேசத்தின் சரிவு தொடங்கியது. ரஷித்கான் தனது சுழற்பந்துவீ்ச்சு மூலம் வங்கதேச பேட்ஸ்மேன்களை மிரட்டினார். இவரின் பந்து தொடுவதற்கே வீரர்கள் மிரண்டனர். ரஷித்கான் வீசிய 11-வது ஓவரில் முஸ்பிகுர் ரஹ்மான் 20 ரன்களிலும், அடுத்த பந்தில் சபிர் ரஹ்மானும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

17-வது ஓவரில் இருந்து வங்கதேசம் அணியின் சரிவு தொடங்கியது. 108 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்த வங்கதேச அணி அடுத்த 14 ரன்களைச் சேர்ப்பதற்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில்  களமிறங்கிய மோடஸ் ஹூசைன்(14), அபுல்ஹசன்(5), ருபல் ஹூசைன்(0), அபு ஜயத்(1) என விரைவாக ஆட்டழந்தனர்.

19 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித்கான், சபூர் ஜத்ரன் தலா 3 விக்கெட்டுகளையும், முகம்மது நபி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.