சம்பள பாக்கி பிரச்சினை: 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க போவதாக ஜிம்பாப்வே வீரர்கள் மிரட்டல்

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

Update: 2018-06-05 21:15 GMT

ஹராரே,

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்த நாட்டு அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த இலங்கை தொடரில் இருந்து ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு போட்டி கட்டணம் கூட வழங்கப்படவில்லை. இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வருகிற 25–ந் தேதிக்குள் வழங்காவிட்டால், ஜிம்பாப்வேயில் அடுத்த மாதம் (ஜூலை 1–ந் தேதி முதல் 8–ந் தேதி வரை) நடைபெறும் 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை புறக்கணிக்க போவதாக ஜிம்பாப்வே அணி வீரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த போட்டி தொடருக்கான பயிற்சி முகாமை வீரர்கள் ஏற்கனவே புறக்கணித்து விட்டனர். வீரர்களின் பிரச்சினையை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்