கிரிக்கெட்
வங்காளதேசத்துக்கு எதிரான 2–வது 20 ஓவர் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது

ஆப்கானிஸ்தான்–வங்காளதேச அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
டேராடூன், ஆப்கானிஸ்தான்–வங்காளதேச அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தமிம் இக்பால் 43 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், முகமது நபி 2 விக்கெட்டும், ‌ஷபூர் ஜாட்ரன், கரிம் ஜனாட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சமியுல்லா ஷென்வாரி 49 ரன்னும், முகமது நபி ஆட்டம் இழக்காமல் 31 ரன்னும் எடுத்தனர். வங்காளதேச அணி தரப்பில் மோசாடெக் ஹூசைன் 2 விக்கெட்டும், ருபெல் ஹூசைன், அபு ஹிடெர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 16–வது ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்த ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 4 ஓவர்கள் பந்து வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் ஆட்டத்திலும் ரஷித்கான் ஆட்டநாயகன் விருதை பெற்று இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 2–0 என்ற கணக்கில் போட்டி தொடரையும் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டேராடூனில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.