கிரிக்கெட்
ரஷீத் கான் சுழலில் சிக்கி 2 வது 20 ஓவர் போட்டியிலும் தோல்வி கண்ட வங்காள தேசம்

ரஷீத் கானின் அசத்தல் பவுலிங்கால் வங்க தேசத்துக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. #T20I
வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று 20 ஓவர்  போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது. முதல் போட்டியில் வங்கதேச அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இதையடுத்து நடந்து இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் தமீம் இக்பாலை தவிர மற்றவர்கள் சோபிக்காததால், அந்த அணி 20 ஓவர் முடிவில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரஷீத் கானின் சுழலை சமாளிக்க முடியாமல் திணறிய வங்க தேச வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், அந்த அணியால் 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரஷீத் கான், 4 ஓவர்களை வீசி 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

135 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 18.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியிலும் ரஷீத் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஒவ்வொரு போட்டியிலும் மிரட்டலாக பந்துவீசி தனது திறமையை நிரூபித்து   எதிரணிகளை கலங்கடித்து வருகிறார் ரஷீத் கான்.