ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து பெண்கள் அணி 490 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை

அயர்லாந்துக்கு சென்றுள்ள நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் நேற்று மோதியது.

Update: 2018-06-08 21:30 GMT

டப்ளின்,

அயர்லாந்துக்கு சென்றுள்ள நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் நேற்று மோதியது. டப்ளின் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் அயர்லாந்தின் பந்து வீச்சை நொறுக்கித்தள்ளிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தது. 10–வது சதத்தை நிறைவு செய்த தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான சுசி பேட்ஸ் 151 ரன்களும் (94 பந்து, 24 பவுண்டரி, 2 சிக்சர்), மேடி கிரீன் 121 ரன்களும் (77 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), அமெலியா கெர் 81 ரன்களும் (45 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.

ஒட்டுமொத்த ஒரு நாள் போட்டி (ஆண்கள் போட்டியையும் சேர்த்து) வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது. பெண்கள் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 1997–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுக்கு 455 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தங்களது முந்தைய உலக சாதனையை நியூசிலாந்து தற்போது முறியடித்து இருக்கிறது. ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் 2016–ம் ஆண்டு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுக்கு 444 ரன்கள் திரட்டியது அதிகபட்சமாக உள்ளது.

அயர்லாந்தின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் காரா முர்ரே 10 ஓவர்களில் 119 ரன்களை வாரி வழங்கினார். ஒரு நாள் போட்டியில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சு இது தான்.

மேலும் செய்திகள்