கிரிக்கெட்
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: ஒரு ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் ‘திரில்’ வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றதுடன், தொடரையும் முழுமையாக வசப்படுத்தியது.
டேராடூன், வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றதுடன், தொடரையும் முழுமையாக வசப்படுத்தியது.20 ஓவர் கிரிக்கெட் வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டேராடூனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது.அடுத்து களம் கண்ட வங்காளதேச அணி ஒரு கட்டத்தில் 53 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை (8.3 ஓவர்) இழந்து திணறியது. பின்னர் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமும், மக்முதுல்லாவும் இணைந்து அணியை தூக்கி நிறுத்தினர். கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. 19–வது ஓவரை வீசிய கரிம் ஜனத்தின் ஓவரில் முஷ்பிகுர் ரஹிம் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விரட்டியடிக்க, அந்த ஓவரில் 21 ரன்கள் வந்தது.ஒரு ரன்னில் முடிவு இதையடுத்து கடைசி ஓவரில் வங்காளதேசத்தின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதிஓவரை ‘நம்பர் ஒன்’ சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் வீசினார். முதல் பந்தில் முஷ்பிகுர் ரஹிம் (46 ரன், 37 பந்து, 7 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அடுத்த 4 பந்துகளில் ரஷித்கான் 5 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி பந்தில் வங்காளதேசத்தின் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது.கடைசி பந்தை சந்தித்த ஆரிபுல் ஹக், ‘லாங் ஆன்’ திசையில் பந்தை பவுண்டரி நோக்கி தூக்கியடித்தார். பந்து சிக்சருக்கு செல்லுமோ என்று எதிர்பார்த்த வேளையில், அங்கு நின்ற ‌ஷபியுல்லா தாவிக்குதித்து பந்தை தடுத்தார். கீழே விழுந்த பந்து மறுபடியும் எல்லைக்கோட்டை நூலிலை அளவுக்கு நெருங்கிய போது, ‌ஷபியுல்லா சூப்பராக தடுத்து, பவுண்டரியாகாமல் பார்த்துக் கொண்டார். இதற்குள் 2 ரன்கள் எடுத்த வங்காளதேச வீரர்கள் 3–வது ரன்னுக்கு ஓட முயற்சித்த போது மக்முதுல்லா (45 ரன்) ரன்–அவுட் செய்யப்பட்டார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. வங்காளதேச அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்களே எடுக்க முடிந்தது.தொடரை வென்றது வெற்றியையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆப்கானிஸ்தான் 3–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த தொடரில் மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய ரஷித்கான் தொடர்நாயகன் விருதை பெற்றார்.ஆப்கானிஸ்தான் அணி அடுத்து இந்தியாவுடன் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. இந்த போட்டி பெங்களூருவில் வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது.