கிரிக்கெட்
ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்:பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி

பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கோலாலம்பூர், 

பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்

6 அணிகள் இடையிலான 7-வது பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

இந்த போட்டி தொடரில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சானா மிர் ஆட்டம் இழக்காமல் 20 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் எக்தா பிஸ்த் 3 விக்கெட்டும், பூனம் யாதவ், தீப்தி ஷர்மா, அனுஜா பட்டீல், ஷிகா பாண்டே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்திய அணி வெற்றி

அடுத்து எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில், மிதாலி ராஜ், தீப்தி ஷர்மா ஆகியோர் டக்-அவுட் ஆகி அதிர்ச்சி தொடக்கம் அளித்தனர். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. மந்தனா தனது பங்குக்கு 38 ரன்கள் சேர்த்தார்.

16.1 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 34 ரன்னுடனும், அனுஜா பட்டீல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இந்திய வீராங்கனை எக்தா பிஸ்த் ஆட்டநாயகி விருது பெற்றார்.

இலங்கை அணி தோல்வி

மற்றொரு லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணி 104 ரன்னில் இலங்கையை சுருட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.சி.சி. முழுநேர உறுப்பினர் நாட்டு அணிக்கு எதிராக தாய்லாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இன்னொரு லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை ஊதித்தள்ளியது.

லீக் ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி 4 வெற்றி, ஒரு தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தும், வங்காளதேச அணி 4 வெற்றி, ஒரு தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்திய அணி தொடர்ச்சியாக 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. பாகிஸ்தான் (6 புள்ளிகள்), இலங்கை (4 புள்ளிகள்), தாய்லாந்து (4 புள்ளிகள்), மலேசியா (0) அணிகள் முறையே 3 முதல் 6 இடங்கள் பெற்று வெளியேறின.

இன்று இறுதிப்போட்டி

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேச அணிகள் (காலை 11.30 மணி) மோதுகின்றன. முன்னதாக லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.