ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கம்

உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-06-11 23:30 GMT
மும்பை,

சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது வரலாற்று சிறப்பு மிக்க முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. இந்த ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. காயம் காரணமாக கேப்டன் விராட்கோலி இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம் பெற்று இருந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா காயம் காரணமாக விலகியதால் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்தியா, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணி வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு (யோ-யோ தேர்வு) நடத்தப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளரும், சமீபத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சர்ச்சையில் சிக்கியவரும், விபத்தில் சிக்கி மீண்டு வந்தவருமான முகமது ஷமி தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டெல்லியை சேர்ந்த 25 வயதான வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழுவினர் நேற்று தெரிவித்துள்ளனர். நவ்தீப் சைனி 31 முதல் தர போட்டியில் விளையாடி 96 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாத சஞ்சு சாம்சன், இந்திய ‘ஏ’ அணியில் நீக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பதிலாக 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் கேப்டன் இஷான் கிஷன் ‘ஏ’ அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

பெங்களூருவில் நேற்றைய பயிற்சிக்கு பின்னர், இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள பேட்ஸ்மேன் கருண்நாயர் அளித்த பேட்டியில், ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி தங்களது திறமையை ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்கள். ரஷித் கான் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் டெஸ்ட் போட்டி என்பது வித்தியாசமான ஆட்டமாகும். பேட்டிங் மற்றும் உடல் தகுதி விஷயத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நான் கடினமாக உழைத்து வருகிறேன். எனது ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடியதால் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து உள்ளேன். வரும் போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன். அடுத்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பது தான் எனது முக்கிய நோக்கமாகும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்