கிரிக்கெட்
இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட்: பெங்களூருவில் இன்று தொடக்கம்

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது.
பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் என்பதால் இது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய ஆப்கானிஸ்தான் அணியினர், அதே வேகத்தில் தங்களது ‘கன்னி’ டெஸ்ட் பயணத்தை தொடங்க இருக்கிறார்கள். பேட்டிங்கில் பெரிய அளவில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி ரஷித்கான், முஜீப் ரகுமான், முகமது நபி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் மிரட்டுவோம் என்று சவால் விட்டுள்ளது. குறுகிய வடிவிலான போட்டி போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரஷித்கான் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் பிலிப் சிமோன்ஸ் கூறியுள்ளார்.

‘நம்பர் ஒன்’ அணியான இந்திய அணி ரஹானே தலைமையில் களம் இறங்குகிறது. காயத்தால் அவதிப்படும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. உள்ளூரில் ஆடுவது இந்தியாவுக்கே சாதகமான அம்சம் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

இந்திய கேப்டன் ரஹானே நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானை நாங்கள் எந்த வகையிலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம். அவர்கள் ஓரளவு நல்ல அணி தான். சிறந்த பந்து வீச்சாளர்கள் அவர்களிடம் இருக்கிறார்கள். களம் இறங்கி, எந்த வித கருணையும் காட்டாமல் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.’ என்றார்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: எம்.விஜய் அல்லது தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே (கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.

ஆப்கானிஸ்தான்: முகமது ஷாசாத், ஜாவித் அகமதி, ரமத் ஷா, அஸ்கார் ஸ்டானிக்ஜாய் (கேப்டன்), நசிர் ஜமால் அல்லது ஹஷ்மத்துல்லா சாஹிதி, முகமது நபி, அப்சர் ஜஜாய், ரஷித்கான், அமிர் ஹம்சா அல்லது ஜாகிர் கான், யாமின் அகமத்ஜாய், முஜீப் ரகுமான் அல்லது வபதார்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.