ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அபார தொடக்கம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தவானின் சாதனை சதத்துடன் இந்திய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. முரளிவிஜயும் சதம் விளாசினார்.

Update: 2018-06-14 23:00 GMT
பெங்களூரு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை ஐ.சி.சி. வழங்கியது. ஆப்கானிஸ்தான் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை இந்தியாவுடன் தொடங்க விருப்பம் தெரிவித்தது. அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் சம்மதம் தெரிவித்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவுடன் மோதும் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் அணிகளின் பட்டியலில் 12-வது அணியாக ஆப்கானிஸ்தான் இணைந்தது.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஷிகர் தவானும், முரளிவிஜயும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் இருந்ததால் சில ஓவர்களை எச்சரிக்கையுடன் ஆடிய இந்திய வீரர்கள் அதன் பிறகு ரன்வேட்டையை ஆரம்பித்தனர்.

அனுபவம் இல்லாத ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை தவான் நையபுடைத்து எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது. ஆனால் இந்திய ஆடுகளங்களில் முதல் நாளில் சுழற்பந்து வீச்சு எடுபடாது என்பது ஆப்கானிஸ்தானுக்கு தெரியாது போலும்.

உலகின் நம்பர் ஒன் 20 ஓவர் போட்டி பவுலரான சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் வீசிய முதல் ஓவரிலேயே தவான் 3 பவுண்டரி விரட்டினார். அவரது இன்னொரு ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். சுழற்பந்து வீச்சை சில அடி இறங்கி வந்து ரன்மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஷிகர் தவான் 87 பந்துகளில் 7-வது சதத்தை எட்டினார். உணவு இடைவேளைக்குள் சதம் அடித்த தவான், இதன் மூலம் முதல் நாளில் உணவு இடைவேளைக்கு முன்பாக சதத்தை ருசித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு ஷேவாக் 99 ரன்கள் எடுத்ததே (2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) இந்த வகையில் இந்திய வீரரின் அதிகபட்சமாக இருந்தது.

தவானின் அதிரடியால் ஸ்கோர் ஒரு நாள் போட்டி போன்று துரிதமாக எகிறியது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்கு பிறகு தவான் நிலைக்கவில்லை. ஸ்கோர் 168 ரன்களாக உயர்ந்த போது தவான் 107 ரன்களில் (96 பந்து, 19 பவுண்டரி, 3 சிக்சர்), வேகப்பந்து வீச்சாளர் யாமின் அகமத்ஜாயின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை அறுவடை செய்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமை அகமத் ஜாய்க்கு கிடைத்தது.

அடுத்து விஜயுடன், லோகேஷ் ராகுல் கைகோர்த்து அதிரடி காட்டினார். அப்போது மழை குறுக்கிட்டதால் ஏறக்குறைய 2 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்த பிறகு தொடர்ந்து மட்டையை சுழட்டிய விஜய் தனது 12-வது சதத்தை நிறைவு செய்தார். 2-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் திரட்டிய இந்த ஜோடி ஸ்கோர் 280 ரன்களை எட்டிய போது பிரிந்தது. விஜய் 105 ரன்களில் (153 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் வபதாரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். பந்து வெளியே செல்லும் என்று நினைத்து விஜய் பேட்டை உயர்த்த, அது காலுறையை தாக்கியது. அப்பீல் செய்தும் பலன் இல்லை. அடுத்த ஓவரில் ராகுலும் (54 ரன், 64 பந்து, 8 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.

ஒரு கட்டத்தில் இந்தியாவின் ரன்ரேட் 5 ரன்களுக்கு மேலாக நகர்ந்தது. டாப்-3 வீரர்கள் வெளியேறியதும் ரன்ரேட் வெகுவாக குறைந்தது. புஜாராவும், கேப்டன் ரஹானேவும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். இந்த கூட்டணியை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பிரித்தார். அவரது பந்தில் ரஹானே (10 ரன், 45 பந்து) எல்.பி.டபிள்யூ. ஆனார். மழையின் தாக்கமோ என்னவோ, இறுதி கட்டத்தில் ரஷித்கானின் பந்து வீச்சு நன்கு சுழன்று திரும்பியது. இதனால் இந்திய வீரர்கள் சற்று தடுமாறினர். 30 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய புஜாரா 35 ரன்களில் (52 பந்து, 6 பவுண்டரி) விக்கெட்டை தாரை வார்த்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் மறுபிரவேசம் செய்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (4 ரன்) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்துள்ளது. கடைசி 67 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘முதலாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள். ஆப்கானிஸ்தான் தங்களது வரலாற்று சிறப்பு மிக்க போட்டியை இந்தியாவுடன் விளையாட தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற விளையாட்டுகள் மூலம் இரு நாட்டு மக்களிடையிலான உறவு மேலும் வலுப்பெறும்’ என்றார்.

மேலும் செய்திகள்