ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. #India #Afghanistan

Update: 2018-06-15 12:44 GMT
பெங்களூரு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை ஐ.சி.சி. வழங்கியது. ஆப்கானிஸ்தான் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை இந்தியாவுடன் தொடங்க விருப்பம் தெரிவித்தது. அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் சம்மதம் தெரிவித்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவுடன் மோதும் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் அணிகளின் பட்டியலில் 12-வது அணியாக ஆப்கானிஸ்தான் இணைந்தது.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணி 104.5 ஓவர்களில் 474 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது. முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 27.5 ஓவர்களிலும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டும் எடுத்தது. 350 ரன்களுக்கு மேல் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் இரண்டாவது இன்னிங்சையும் தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்சிலும் ஆப்கானிஸ்தான் ஜொலிக்கவில்லை, 38.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 5 நாட்கள் ஆட்டம் 2 நாட்களில் முடிந்தது. இரண்டாவது இன்னிங்சில் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் என்ற அபார வெற்றியை பதிவு செய்தது.

மேலும் செய்திகள்