ஒரே நாளில் ஆப்கானிஸ்தானின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் அந்த அணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி 2-வது நாளிலேயே இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது.

Update: 2018-06-15 23:30 GMT
பெங்களூரு,

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்திருந்தது. ஷிகர் தவான் (107 ரன்), முரளிவிஜய் (105 ரன்) சதம் விளாசினர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி உணவு இடைவேளைக்கு முன்பாக முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் 474 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தனது 3-வது அரைசதத்தை எட்டிய ஹர்திக் பாண்ட்யா 71 ரன்கள் (94 பந்து, 10 பவுண்டரி) திரட்டினார். அஸ்வின் (18 ரன்), ரவீந்திர ஜடேஜா (20 ரன்), உமேஷ் யாதவ் (26 ரன், 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகிய பின்வரிசை வீரர்களும் கணிசமான பங்களிப்பை அளித்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் யாமின் அகமத்ஜாய் 3 விக்கெட்டுகளும், ரஷித்கான், வபதார் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய அனுபவம் இல்லாத ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண்டாடினர். தொடக்க விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் சாய்க்க, மிடில் வரிசையை அஸ்வின்- ஜடேஜா சுழல் கூட்டணி சீர்குலைத்தது. உணவு இடைவேளைக்கு பிறகு களம் கண்ட ஆப்கானிஸ்தான் தேனீர் இடைவேளைக்குள் சிதறிப்போனது.

27.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. அதிகபட்சமாக முகமது நபி 24 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா, இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு ‘பாலோ- ஆன்’ வழங்கியது. இதன்படி 365 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, மறுபடியும் தகிடுதத்தம் போட்டது. இரண்டு மணி நேரத்திற்குள் ஆப்கானிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் இந்திய பவுலர்கள் முழுமையாக கபளகரம் செய்தனர். ஹஷ்மத்துல்லா ஷகிதியின் (36 ரன், நாட்-அவுட்) போராட்டம், அந்த அணி 100 ரன்களை கடக்க மட்டுமே உதவியது.

முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 38.4 ஓவர்களில் 103 ரன்னில் முடங்கியது. சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 4 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றதுடன் கோப்பையையும் வசப்படுத்தியது.

இது தான் ஆப்கானிஸ்தான் அணியின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டியில் அந்த அணி 2-வது நாளுக்குள் அடங்கிப்போனது பரிதாபமே. அதிரடியாக சதம் அடித்த தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

2-வது நாளிலேயே வெற்றி பெற்று இந்தியா சாதனை

* இந்த டெஸ்டில் ஒரே நாளில் மொத்தம் 24 விக்கெட்டுகள் (ஆப்கானிஸ்தானுக்கு 20 விக்கெட், இந்தியாவுக்கு 4 விக்கெட்) சரிந்தன. டெஸ்ட் கிரிக்கெட்டில் 1902-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு நாளில் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட் எண்ணிக்கை இது தான். ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் 1888-ம் ஆண்டு லண்டனில் நடந்த இங்கிலாந்து- ஆஸ்திரேலியா டெஸ்டில் ஒரு நாளில் 27 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதே சாதனையாக நீடிக்கிறது.

* 141 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்டில் 2-வது நாளிலேயே முடிவு கிடைப்பது இது 21-வது நிகழ்வாகும். அதே சமயம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது நாளிலேயே வெற்றி பெற்றிருப்பது இது தான் முதல் தடவையாகும். இந்த சாதனையை செய்த முதல் ஆசிய அணியும் இந்தியா தான்.

* ஆப்கானிஸ்தான் அணி நேற்றைய நாளில் இரண்டு இன்னிங்சையும் விளையாடி 20 விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரே நாளில் ஒரு அணி இரு இன்னிங்சிலும் முழுமையாக ஆல்-அவுட் ஆவது இது 4-வது நிகழ்வாகும்.

* இந்த டெஸ்டில் மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் ஜாகீர்கானை (311 விக்கெட், 92 டெஸ்ட்) பின்னுக்கு தள்ளிவிட்டு 4-வது இடத்தை பிடித்தார். அஸ்வின் இதுவரை 58 டெஸ்டில் ஆடி 316 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்த வரிசையில் முதல் 3 இடங்களில் கும்பிளே (619 விக்கெட்), கபில்தேவ் (434 விக்கெட்), ஹர்பஜன்சிங் (417 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

* இந்திய அணி இந்த டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியாவின் இமாலய வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு வங்காளதேச அணியை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே இந்த வகையில் இந்தியாவின் சிறந்த வெற்றியாக இருந்தது.

* அறிமுக டெஸ்டில் ஒரு இன்னிங்சில் குறைந்த ஓவர்கள் (27.5 ஓவர்) ஆடிய அணி என்ற மோசமான சாதனை ஆப்கானிஸ்தான் வசம் ஆகியுள்ளது.

* வெற்றி கண்ட ஒரு டெஸ்டில் இந்திய அணி குறைந்த பந்துகள் (399 பந்து) வீசிய போட்டியாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்பு குறைந்தபட்சமாக 2004-ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய போது அந்த போட்டியில் இந்திய பவுலர்கள் 554 பந்துகள் வீசியிருந்தனர்.

மேலும் செய்திகள்