20 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து பெண்கள் அணி 250 ரன்கள் குவித்து உலக சாதனை நியூசிலாந்தின் சாதனையை தகர்த்தது

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 250 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

Update: 2018-06-21 21:30 GMT

டவுன்டான், 

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 250 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

இங்கிலாந்து 250 ரன்

நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் டவுன்டானில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2–வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து– தென்ஆப்பிரிக்க அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. டாமி பியூமோன்ட் 116 ரன்களும் (52 பந்து, 18 பவுண்டரி, 4 சிக்சர்), டேனியலி வியாட் 56 ரன்களும் விளாசினர்.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து 121 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

ஒரே நாளில் உடைந்த சாதனை

பெண்கள் 20 ஓவர் போட்டி வரலாற்றில் இது தான் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இதே நாளில் காலையில் நடந்த முதல் லீக்கில் நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்கு 216 ரன்கள் திரட்டியதே அதிகபட்சமாக இருந்தது. அடுத்த சில மணி நேரத்தில் இங்கிலாந்து அணி அந்த சாதனையை தகர்த்து இருக்கிறது.

20 ஓவர் போட்டியில் முதல்முறையாக சதம் அடித்த 27 வயதான டாமி பியூமோன்ட் கூறுகையில், ‘காலையில் நியூசிலாந்து வீராங்கனைகள் உலக சாதனை நிகழ்த்தியதை பார்த்தோம். ஆனால் எங்களது பயிற்சியாளர் மார்க் ராபின்சன் போட்டிக்கு முன்பாக எங்களிடம் பேசும் போது, சாதனையை முறியடிக்க முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கினார். ஆனால் அதை எங்களில் சில வீராங்கனைகள் சவாலாக எடுத்து கொண்டோம். ஆடுகளம் நம்ப முடியாத அளவுக்கு பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருந்தது. ஒரே நாளில் இரண்டு அணிகளின் அதிரடியால் நிலைகுலைந்து போன தென்ஆப்பிரிக்க வீராங்கனைகளுக்காக வருந்துகிறேன்’ என்றார்.

ஆண்கள் அணியை போல்...

சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து ஆண்கள் அணி, ஒரு நாள் கிரிக்கெட்டில் 481 ரன்கள் சேர்த்து புதிய சரித்திரம் படைத்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது பெண்கள் அணியினரும் மிரட்டியிருக்கிறார்கள்.

இந்த முத்தரப்பு தொடரில் நாளையும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. காலையில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கும் இங்கிலாந்து அணி இரவில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்