கிரிக்கெட்
முழு உடல்தகுதியுடன் இருக்கிறேன்: ‘கவுண்டி கிரிக்கெட்டை தவற விட்டது நல்லது தான்’ விராட்கோலி பேட்டி

கவுண்டி கிரிக்கெட்டில் ஆடாமல் அதை தவற விட்டது நல்லது தான் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
புதுடெல்லி, கவுண்டி கிரிக்கெட்டில் ஆடாமல் அதை தவற விட்டது நல்லது தான் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.கோலி பேட்டி இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர்போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதற்கு முன்பாக அயர்லாந்துக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் (ஜூன் 27 மற்றும் ஜூன் 29) ஆடுகிறது.81 நாட்கள் பயணமாக இந்திய அணி இன்று டெல்லியில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. அதற்கு முன்பாக இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–எனக்கு கழுத்தில் ஏற்பட்ட காயம் இப்போது குணமடைந்து விட்டது. 100 சதவீதம் முழு உடல்தகுதியுடன் இருக்கிறேன். மும்பையில் 6, 7 பகுதிகளாக தீவிர பயிற்சி மேற்கொண்டேன். மீண்டும் களம் இறங்குவதற்கு தயாராக உள்ளேன். அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடுவேன்.கவுண்டி கிரிக்கெட் குறித்து... இங்கிலாந்தின் ஆடுகளத்தன்மை மற்றும் அங்குள்ள கடினமான சூழலின் அனுபவத்தை பெறுவதற்காக அங்கு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விரும்பினேன். காயம் காரணமாக அது முடியாமல் போனது. திரும்பி பார்த்தால், கவுண்டி கிரிக்கெட்டில் ஆடாமல் போனது நல்லது என்றே தோன்றுகிறது. அங்கு சென்று இருந்தால் உடல்ரீதியாக 90 சதவீதம் திருப்தி அடைந்திருப்பேன். ஆனால் இப்போது 110 சதவீதம் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். தொடருக்கு முன்பாக புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இப்படி இருக்க வேண்டும் என்று நினைத்து செய்யவில்லை. அதுவாகவே நடந்து விட்டது.கடந்த முறை எங்களது இங்கிலாந்து பயணம் (2014–ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் 1–3 என்ற கணக்கில் தோல்வி) சிறப்பாக அமையவில்லை. ஒரு அணியாக எங்களது செயல்பாடு நிலையற்றதாக காணப்பட்டது. பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் இரண்டு தரப்புமே கூடுதல் நெருக்கடியை உணர்ந்ததால் சோபிக்க முடியாமல் போனது. இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை வித்தியாசமானது என்பதை அறிவோம். அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். ஆனால் 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகள் முடிந்து ஒரு மாதம் கழித்து தான் (ஆகஸ்டு 1–ந்தேதி முதல்) டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கிறது. டெஸ்ட் போட்டிக்குள் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள முடியும். நன்கு பழகிவிட்டால், இது வெளிநாட்டு டெஸ்ட் தொடர் என்ற உணர்வு கூட வராது.மொத்தத்தில் ‘இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மாறி நல்ல மனநிலையில் இருக்கிறோம்’ என்ற உணர்வு வீரர்களுக்கு வந்தாலே போதும். அது தான் மிகவும் முக்கியமான ஒன்று. மனரீதியாக நெருக்கடி இல்லாமல் இருந்தால், சிறப்பாக செயல்பட முடியும். இந்த டெஸ்ட் தொடரை நினைத்து ஒவ்வொரு வீரர்களும் பரவசத்தில் இருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்க தொடருக்கு பிறகு மென்மேலும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட ஆர்வமாக இருக்கிறோம்.இலக்கு என்ன? இங்கிலாந்துக்கு சென்று நீண்ட காலம் ஆகி விட்டது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை (2017–ம் ஆண்டு) இங்கிலாந்தில் தானே ஆடினோம். வங்காளதேசத்தில் இல்லையே. இங்கிலாந்து தொடரில் உங்களது இலக்கு என்ன? என்று அடிக்கடி கேட்கிறார்கள். கடந்த முறை இங்கிலாந்துக்கு புறப்பட்ட போதும் இதைத் தான் கேட்டார்கள். அதற்கு நான், அங்கு சென்றவுடன் கடைவீதிக்கு சென்று காபி குடிக்க விரும்புவதாக கூறினேன். வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும்போது எனது மனநிலை வித்தியாசமானதாக இருக்கும். முதலில் அந்த நாட்டை எப்படி மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து நேரத்தை கழிப்பது என்று யோசிப்பேனே தவிர, கிரிக்கெட் குறித்து கூட சிந்திக்க மாட்டேன். எனக்கு எல்லாமே சவுகரியமாக மாறி விட்டால், அதன் பிறகு நான் நன்றாக ஆடுவேன் என்பது எனக்கு தெரியும்.ஆட்ட வியூகங்களில் எந்த மாற்றமும் இருக்காது. முந்தைய தொடர்களில் என்ன செய்தோமோ அதைத்தான் இங்கும் செய்வோம். ஒவ்வொரு தொடருக்கும் யுக்திகளை மாற்றிக்கொண்டு இருக்க முடியாது.இவ்வாறு விராட் கோலி கூறினார்.பயிற்சியாளர் கருத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், ‘டெஸ்ட் தொடருக்கு முன்பாக குறுகிய வடிவிலான போட்டிகள் நடப்பது நல்ல வி‌ஷயமாகும். ஏனெனில் டெஸ்ட் போட்டிக்குள் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப பழகிக்கொள்ள போதிய அவகாசம் கிடைக்கும். எங்களை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியும் உள்ளூர் போட்டி போன்றது தான். உலகில் எந்த ஆடுகளத்தில் களம் இறங்கினாலும் வெற்றி பெறுவதே எங்களது கடமை’ என்றார்.