இந்திய மகளிர் கிரிக்கெட் டி20 கேப்டன், போலி பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரம்: டி.எஸ்.பி பணி இழப்பாரா?

போலி பட்டப்படிப்பு சான்றிதழ் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ஹர்மன்பிரீத் கெளர், பஞ்சாப் மாநில டி.எஸ்.பி பணியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2018-07-02 10:54 GMT
சண்டிகர்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் டி20 போட்டிகளின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களை சமர்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வழங்கப்பட்ட பஞ்சாப் மாநில டி.எஸ்.பி பதவி பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மோகாவை சேர்ந்தவர் ஹர்மன்பிரீத் கௌர். இவர் கடந்த ஆண்டு ஐசிசியின் பெண்களுக்கான உலக கோப்பை போட்டியின்போது சிறப்பாக விளையாடியதன் மூலம் அர்ஜுனா விருதை பெற்றவர். இதன் மூலம் அவருக்கு கிடைத்த மேற்கு ரயில்வே துறை பணி தனக்கு வேண்டாம் என்றும், பஞ்சாப் போலீசில் டிஎஸ்பியாக பணியாற்றவே விருப்பம் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கடந்த மார்ச் 1-ந் தேதி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும், மாநில டிஜிபியாக உள்ள சுரேஷ் அரோராவும் ஹர்மன் பிரீத்துக்கு டி.எஸ்.பி பதவியினை வழங்கினர். இதற்கான சான்றிதழ் சரிபார்பதற்காக ஜலந்தரில் உள்ள பஞ்சாப் ஆயுத படை போலீஸார் மீரட்டில் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியதில் அந்த சான்றிதழில் உள்ள பதிவு எண் போலியானது என்று தெரியவந்தது. இதனால் ஹர்மன்பிரீத் கௌர் டி.எஸ்.பி பதவி இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஹர்மன்பிரீத் கௌர் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் செய்திகள்